அடிப்படைவாதிகளுக்கு புகலிடமாக மாறிய தமிழகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
அடிப்படைவாதிகளுக்கு புகலிடமாக மாறிய தமிழகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : ஜன 26, 2025 05:01 PM

சென்னை: '' ஒரு காலத்தில் அமைதியை விரும்பும் மாநிலமாக கருதப்பட்ட தமிழகம், இன்று அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர். ஹிந்து மதத்தின் மீது பற்று கொண்ட அவர், திருபுவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடந்த மதமாற்றத்தை தட்டிக் கேட்டார். கடந்த 2019 பிப்., 5ல், மர்ம நபர்களால் ராமலிங்கம் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுகுறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகைமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணையில், தேனி, திண்டுக்கல், கும்பகோணம், திருவிடைமருதுாரைச் சேர்ந்த, 18 பேர், ராமலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.
அவர்களில் திருவிடைமருதுார், நடு முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ரஹ்மான் சாதிக், 41, மற்றும் அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.மேலும், திருபுவனம் முகமது அலி ஜின்னா, 36; கும்பகோணம் அப்துல் மஜீத், 39. பாபநாசம் புர்ஹானுதீன், 31; திருவிடைமருதுார் சாகுல் ஹமீது, 29 மற்றும் நபீல் ஹாசன், 30 ஆகியோரை, தேடப்படும் குற்றவாளிகளாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அறிவித்தனர். வர்கள் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.
இந்த வழக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2021 ல் தலைமறைவான முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரஹ்மான் மாலிக்கை கைது செய்தது. பிறகு 2024 நவ.,ல் அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீதை கொடைக்கானல் அருகே பூம்பாறையில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இவ்வழக்கில் 19வது குற்றவாளியான முகமது அலி ஜின்னாவை கைது செய்து செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் சென்னையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இருவரும் திருபுவனத்தில் உள்ள பெரியபள்ளி மசூதியில் 2019 பிப்.,5ல் கொலைக்கான சதியை தீட்டியதாகவும், மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ராமலிங்கத்தின் கைகளை வெட்ட திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2019 ல் தஞ்சாவூரில் அப்பாவி மக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதை தடுத்த ராமலிங்கத்தை தடை செய்யப்பட்ட அடிப்படைவாத இயக்கமான பி.எப்.ஐ., இயக்கத்தினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 19 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
ஒரு காலத்தில் அமைதியை விரும்பும் மாநிலமாக கருதப்பட்ட தமிழகம், இன்று அடிப்படைவாதிகளின் பாதுகாப்பாக புகலிடமாக மாறி உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஒரு பயங்கரவாதிக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இது, மாநிலத்தில் தி.மு.க., மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆழமான வாக்குவங்கி அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.