ADDED : ஆக 11, 2025 04:07 AM
ராமநாதபுரம்: தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் அளித்த பேட்டி:
வரும் 24ம் தேதி, திண்டுக்கல்லில் சமூக சமத்துவ மாநாடு நடக்கவுள்ளது. இதில், 'தேவேந்திர குல வேளாளர் இனத்தை பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வேண்டும்' என வலியுறுத்தப்படும். தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது. போதைப் பொருட்களால், அதிக குற்றங்கள் நடக்கின்றன. போலீசாரும் சட்டத்தை மதிக்காமல், எஸ்.ஐ., கொலை வழக்கில் கைதானவரை, தன்னிச்சையாக என்கவுன்டர் செய்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அ.தி.மு.க., நல்ல உறவில் உள்ளது. நாங்களும் அந்த கூட்டணியில் தான் உள்ளோம். எங்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த கட்சி ஆட்சி அமைக்கும். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, எல்லை வரையறை செய்ய வேண்டும். மத்திய அரசை மட்டும் குற்றம் சொல்லாமல், மாநில அரசும் மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.