ADDED : ஏப் 06, 2025 01:04 AM
சென்னை,:''மத்திய அரசின் அரவணைப்பில் உள்ள மாநிலங்கள் எல்லாம், பொருளாதார வளர்ச்சியில் குறைவாக உள்ளன. ஆனால், தமிழகத்தின் வளர்ச்சி அதிகம் உள்ளது,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தடம் புரண்டு கிடந்த தமிழகத்தை, மீண்டும் வளர்ச்சி பாதையிலும், இந்தியாவின் மிக பிரமாண்ட பொருளாதாரமாகவும், வளர்ச்சியில் முதலிடத்தையும், முதல்வர் ஸ்டாலின் பெற்று கொடுத்திருக்கிறார். அனைத்து துறைகள், அனைத்து பகுதிகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால், இந்த இலக்கை தமிழகம் அடைந்துள்ளது.
மற்ற மாநிலங்கள், சேவை துறை, உற்பத்தி என, ஏதேனும் ஒரு துறையில் மட்டும் வளர்ந்திருக்கும். தமிழகம் மட்டும் தான், உற்பத்தி மற்றும் சேவை துறையில் சமமான வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவில் நகரமயமாக்கலில், தமிழகம் முன்னணியில் உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்குடன், முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் அரவணைப்பில் உள்ள மாநிலங்கள் எல்லாம், பொருளாதார வளர்ச்சியில் குறைவாக உள்ளன. ஆனால், தமிழகத்தின் வளர்ச்சி அதிகம் உள்ளது.
மத்திய அரசு, பாரபட்சம் பார்க்காமல், கூட்டாட்சியை மதிக்க வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் போது, இந்தியாவையும் வஞ்சிக்கிறது. மத்திய அரசின் வஞ்சக போக்கை தாண்டி, தமிழகம் வளர்ந்திருக்கிறது.
தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தந்திருந்தால், தமிழகம் இன்னும் அதிகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். தமிழகத்திற்கு போட்டி, மற்ற நாடுகளுடன் தான் உள்ளது. அந்தளவுக்கு தமிழகம் முன்னேறிஉள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால், எந்தெந்த துறைக்கு பாதிப்பு வரும், தமிழகத்தில் அந்த துறைக்கு தேவையானது குறித்து அரசு ஆலோசிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.