3 மாதங்களில் ரூ.8,000 கோடி முதலீடு தமிழகம் இழந்துள்ளது: ராமதாஸ்
3 மாதங்களில் ரூ.8,000 கோடி முதலீடு தமிழகம் இழந்துள்ளது: ராமதாஸ்
ADDED : மார் 26, 2025 08:49 PM
சென்னை:'தமிழகத்தில் மூன்று மாதங்களில், 8,000 கோடி ரூபாய் முதலீட்டை, தமிழகம் இழந்துள்ளது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட, 'கேரியர்' என்ற உலகின் முன்னணி குளிரூட்டி நிறுவனம், அதன் உற்பத்தி மையத்தை, ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் அமைக்க திட்டமிட்டிருந்தது. தற்போது, ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீ சிட்டி பகுதியில் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில், ஆந்திர அரசுடன் விரைவில் கையெழுத்திடவுள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி., நிறுவனம், தென் மாநிலங்களில், 5,000 கோடி ரூபாய் மதிப்பில், அதன் முதல் உற்பத்தி மையத்தை, தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தை விட ஆந்திராவில் தான் முதலீட்டு சூழல் சிறப்பாக இருப்பதாகக் கூறி, அங்கு முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.
அதனால், அதற்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும், 6 நிறுவனங்களும், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான தங்களின் உற்பத்தி ஆலைகளை, ஸ்ரீ சிட்டியில் அமைக்க முடிவு செய்துள்ளன.
தொழில் துவங்குவதற்கான அனுமதி, ஆந்திர மாநிலத்தில் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால் தான், இந்த நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்கள், அதற்கான அரசின் அனுமதியையும், ஒப்புதலையும் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை உண்மை என்பதை, தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய, இரு முதன்மை நிறுவனங்களும், 6 துணை நிறுவனங்களும் ஆந்திராவுக்கு சென்றிருப்பது எடுத்துக்காட்டுகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதலீடுகளை ஈர்க்கும் திறன், தமிழகத்திற்கு குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் துவங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், கடந்த முறை 3வது இடத்தில் இருந்த தமிழகம், இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதலீடுகள் குவிவதை போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த, அரசு முயன்று வருகிறது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.