ஒரு லட்சம் பேருக்கு 159 போலீசார் தான் தமிழகத்தில் பற்றாக்குறை 13,000
ஒரு லட்சம் பேருக்கு 159 போலீசார் தான் தமிழகத்தில் பற்றாக்குறை 13,000
ADDED : அக் 29, 2025 12:41 AM
சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு லட்சம் பேருக்கு, 159 போலீசார் என்ற நிலையே ஐந்து ஆண்டுகளாக தொடர்கிறது.
அதனால், போலீசார் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, போலீஸ் நிலையங்களையும், போலீசாரின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.
அப்போது தான் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கட்டுப்படுத்தவும் முடியும். இதற்காக, ஒரு லட்சம் பேருக்கு எத்தனை போலீசார் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு தேசிய அளவில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், நம் நா ட்டில் அதிகபட்சமாக, நாகாலாந்தில் ஒரு லட்சம் பேருக்கு, 1,135 போலீசார்; குறைந்தபட்சமாக பீஹாரில், 81 போலீசார் பணியில் உள்ளனர்.
தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒரு லட்சம் பேருக்கு, 159 போலீசார் என்ற நிலையே நீடிக்கிறது. கொலை, கொள்ளை என, குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுதோறும் போலீசாரின் பற்றாக்குறை அதிகரிக்கத்தபடி உள்ளது. தற்போது பற்றாக்குறை, 10,000 ஆக உள்ளது.
சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., முதல் கான்ஸ்டபிள் வரை, 1.33 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 1.20 லட்சம் போலீசாரே உள்ளனர். 13,000 பேர் பற்றாக்குறையாக உள்ளனர்.
பணியில் உள்ளவர்களிலும் ஓய்வு, தொடர் விடுமுறை, உடல்நலக் குறைவு, வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சிரமப்படுவோரை தவிர்த்து, மாநிலம் முழுதும் ஒரு லட்சம் போலீசாரே பணியில் உள்ளனர். இவர்களில், 15,000 பேருக்கு அலுவலகம் சார்ந்த பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
காவல் துறைக்கு, புதிதாக ஆட்களை தேர்வு செய்வதில், அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் உள்ளன. போலீஸ் அதிகாரிகளும் காலி பணியிடங்களை முன்கூட்டியே கணித்து, அவற்றை நிரப்ப முழு வீச்சில் செயல்படுவதும் இல்லை.
இது, வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

