ADDED : பிப் 08, 2024 09:57 PM
சென்னை:மத்திய அரசின் அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 7,171 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மின் நிலையங்களில் ஏற்படும் பழுது, பராமரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களால், தினமும் சராசரியாக, 5,000 - 5,500 மெகா வாட் மின்சாரம் தான் வழங்கப்படும்.
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மத்திய மின்சாரத்தின் பங்கு அதிகம் உள்ளது.
தற்போது, எரிபொருள் நிரப்பும் பணிக்காக, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1,000 மெகா வாட்டும்; பழுது காரணமாக, 1,000 மெகா வாட்டும்; அதே பிரச்னையால் கடலுார் என்.எல்.சி., அனல் மின் நிலையத்தில், 910 மெகா வாட்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சில தினங்களாக, மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு, 4,000 மெகா வாட்டிற்கும் குறைவாகவே மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேசமயம், 16,500 மெகா வாட் என்றளவில், மின் நுகர்வு உள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய மின்சாரம் குறைப்பால், மின் வாரியத்திற்கு சொந்தமான, 4,320 மெகாவாட் திறனுடைய ஐந்து அனல் மின் நிலையங்களில், 4,000 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிக்கு, மின் உற்பத்தி நிறுத்தும் விபரம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சம்பந்தமே இல்லாமல் வல்லுார் மின் நிலையத்தில், இரு அலகு களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு விரைந்து மின் உற்பத்தி துவக்க, அதன் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

