ADDED : ஜன 23, 2025 10:39 PM
சென்னை:தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத, ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
அதன்படி, 30 லட்சம் பேருக்கு தலா, 5 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
இதற்காக, 2021 ஏப்ரல் வரை மாதம், 78.46 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்டது.
இது, படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது, 10.84 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது.
இதனால் கார்டுதாரர்களுக்கு, 1 லிட்டர் கூட வழங்க முடியாததால், முதலில் வருவோருக்கு மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களுடன், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு மற்றும் வினியோகம் குறித்து நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
இதில், தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்குமாறு, எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.