திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் மீண்டும் ஒதுக்க ௵தமிழகம் வலியுறுத்தல்
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் மீண்டும் ஒதுக்க ௵தமிழகம் வலியுறுத்தல்
ADDED : டிச 20, 2024 12:22 AM
சென்னை:'திருப்பதி ஏழுமலையான் கோவில் விரைவு தரிசன டிக்கெட்டுகளை, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 1974 முதல் சென்னையில் இருந்து, ஒரு நாள் திருப்பதி சுற்றுலா பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் அழைத்து செல்லப்படும் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாயிலாக, விரைவு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கென விரைவு தரிசன டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு தினமும், 400 டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
சென்னை, கோவை, மதுரை, ஓசூர், கடலுார், பழனி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நடைமுறையை ரத்து செய்வதாக, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
இது, தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களை மிகவும் பாதித்துள்ளது.
எனவே, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆந்திர மாநிலம் நெல்லுார் சென்று, அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியை சந்தித்தார்.
அவரிடம், விரைவு தரிசன டிக்கெட்டுகளை, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.