ADDED : ஜூன் 12, 2025 01:23 AM

சென்னை:''தி.மு.க., அரசின் பல்வேறு நடவடிக்கையால், நாட்டிலேயே 60 சதவீதம் நகரமயமான மாநிலமாக, தமிழகம் உள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், 399.81 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள, 102 திட்டங்களை, துணை முதல்வர் உதயநிதி நேற்று, துவக்கி வைத்தார். மேலும், 957.63 கோடி ரூபாய் மதிப்பிலான, 108 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின், உதயநிதி பேசியதாவது:
கருணாநிதி ஆட்சியில் சென்னை மட்டுமல்ல, மாநிலம் முழுதும் நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்தபோது, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினார்.
அதனால், சென்னையில் குடிநீர் பஞ்சம் கிடையாது; எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள் இருக்கின்றன. மெட்ரோ ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது.
உள்ளாட்சி துறை, அமைச்சராக இருந்தபோது, தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தினார். அதனால், 60 சதவீதம் அளவிற்கு நகரமயமான மாநிலமாக தமிழகம் உள்ளது.
மற்ற மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநகரம் மட்டுமே பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் பரவலாக மாநகரங்கள் வளர்ச்சி பெற்று உள்ளன. சென்னையில் நீர்வழிப் பாதைகள், 58 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரப்படும்.
அதேபோல், கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

