காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகம் முன்னோடி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகம் முன்னோடி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : டிச 06, 2024 06:33 AM

சென்னை: “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் இரண்டாவது கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காலநிலை மாற்றம் தான், மனித சமுதாயம் எதிர்கொள்ள இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். இதை நம் அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. சொல்வது மட்டுமல்ல; அதை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களையும் தீட்டி வருகிறோம்.
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில், நம்மை தக்கவைத்து கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக, தமிழக பசுமை காலநிலை நிறுவனம், தமிழக காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம், தமிழக ஈரநில இயக்கம், தமிழக நெய்தல் மீட்சி இயக்கம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இவைபோன்ற இயக்கங்கள், திட்டமிடுதல்கள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை. இந்த இயக்கங்களுக்கு கொள்கை வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த தமிழக அரசின் செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான், இந்த குழுவின் கடமை.
என் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழு தான், நாட்டிலேயே அமைக்கப்பட்ட முதல் குழு.
அந்த வகையில், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் அமைந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் இருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில், நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழகம் இருக்கிறது. காற்றாலை வாயிலாக ஆண்டுக்கு, 11,900 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தின் காலநிலை திட்டத்தில் முக்கிய துாணாக விளங்குவது, ஊரக நீர் பாதுகாப்பு. நடப்பு நிதியாண்டில், 500 கோடி ரூபாய் முதலீட்டில், 5,000 சிறிய நீர் பாசன குளங்கள், ஊரக வளர்ச்சி துறை வாயிலாக அமைக்கப்பட உள்ளன.
காலநிலை மாற்ற தாக்கங்களை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகும் வகையில், 12 மாநகராட்சிகள், ஒன்பது நகராட்சிகளில், நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன.
வெப்ப அலையை மாநில பேரிடராக, தமிழக அரசு அறிவித்தது. வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான நீர்ச்சத்து மிகுந்த பொருட்களை வழங்க, மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
நாட்டில் அதிக மக்கள் தொகை உடைய நகரங்களில், ஐந்தாவது பெரிய நகரமாக சென்னை உள்ளது. பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையில், காலநிலை செயல் திட்டத்தை தயாரிக்கும், 'சி40' நகரங்களுக்கான கூட்டமைப்பில், சென்னை மாநகராட்சி இணைந்துள்ளது. அந்த அளவிற்கு முன்னெச்சரிக்கையாக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசை பொறுத்தவரை, பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும், இரு கண்களாக நினைத்து தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
நம் வழித்தோன்றல்களாக, இந்த பூமியில் வாழப்போகும் குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு, பசுமையான, இயற்கை கேடுகள் விளைவிக்காத உலகத்தை வழங்க, நம் வாழ்நாளில் திட்டங்களை முன்னெடுத்தோம்; அதில் வெற்றி பெற்றோம் என்று வரலாறு சொல்ல வேண்டும். அதுதான் காலத்துக்கும் நமக்கான பெருமை. இவ்வாறு முதல்வர் பேசினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.