அனைத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம்: கவர்னர் பாராட்டு
அனைத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம்: கவர்னர் பாராட்டு
ADDED : பிப் 09, 2025 01:04 AM

சென்னை:''தமிழகம் அனைத்திலும் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக உள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள அனைத்து துறைகளின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை, நீங்கள் கவனிக்க வேண்டும்,'' என, கவர்னர் ரவி பேசினார்..
மத்திய அரசின், 'மை பாரத்' திட்டத்தின், 16வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. தலைப்பாகை கட்டி, பழங்குடியின இளைஞர்களுடன் நடனமாடி, கவர்னர் ரவி உற்சாகப்படுத்தினார்.
பின், அவர் பேசியதாவது:
தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. இங்கு வந்துள்ள இளைஞர்கள் குறைந்தது, 10 தமிழ் வார்த்தைகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா, பல மொழிகள் மற்றும் கலாசாரத்தை கொண்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக, கலாசார புரிதல்களும் இன்று அதிகரிக்க துவங்கியுள்ளன.
தமிழ் மொழியில் பேச எனக்கு சிரமமாக இருந்தாலும், அதை நான் புரிந்து கொள்கிறேன். தமிழகம் அனைத்திலும் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக உள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள அனைத்து துறைகளின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை, நீங்கள் கவனிக்க வேண்டும்.
இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற, ஒவ்வொருவரின் வளர்ச்சி யும் தேவை. அதன்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்த, முன்னுரிமையுடன் கூடிய பல்வேறு முயற்சிகள், சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இன்றைய இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்துள்ளன. கனவு மற்றும் லட்சியத்துடன், நீங்கள் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய உள்துறை செயலர் ரஜ்னீஷ் குமார், வருமான வரித்துறை கமிஷனர் பிரேம் ஆனந்த், 'மை பாரத்' தமிழக மற்றும் புதுச்சேரி இயக்குநர் செந்தில்குமார், சாய்ராம் கல்லுாரி குழும தலைவர் சாய் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.