உள்நாட்டு பாதுகாப்பில் தமிழகம் முன்னணி: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
உள்நாட்டு பாதுகாப்பில் தமிழகம் முன்னணி: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ADDED : ஜூலை 10, 2025 05:27 PM

சென்னை: '' உள்நாட்டு பாதுகாப்பில், இந்தியாவிலேயே, தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது, '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 1995 முதல் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயங்கரவாதிகளால் குறி வைத்து கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் நெல்லையைச் சேர்ந்த முஹமது அலி ஆகியோர் தலைமறைவாகினர். ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி என்ற இடத்தில், அபுபக்கர் சித்திக் மற்றும் முஹமது அலி ஆகியோரை தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஜூலை 1ம் தேதி கைது செய்தனர்.
அதேபோல், கோவையில் 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்.,) புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக, தமிழக போலீஸ், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் போலீஸ் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் பயங்கரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநில போலீசாருக்கும் எமது நன்றிகள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.