ADDED : ஜூலை 28, 2025 02:32 AM
சென்னை: 'தமிழகம் முழுதும், 2 கோடியே 25 லட்சத்து 93,654 ரேஷன் கார்டுகள் வழியே, பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. வறுமையை ஒழிப்பதில், இதர மாநிலங்களுக்கு தமிழகம் எப்போதும் முன்னோடியாக உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, 26,618 முழு நேரம்; 10,710 பகுதி நேரம் என, மொத்தம், 35,181 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
இக்கடைகள் வாயிலாக, 2 கோடியே 25 லட்சத்து 93,654 ரேஷன் கார்டுகளுக்கு, உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. வாடகை கட்டடங்களில் செயல்படும் ரேஷன் கடை களுக்கு, சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு துறை ரேஷன் கடைகள் 10,661ல் யு.பி.ஐ., முறையை பயன்படுத்தி, ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், அந்த ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில், 2021 அக்டோபர் முதல் கடந்த மார்ச் வரை, 1.93 கோடி ரூபாய் மதிப்பிலான பனைவெல்லம், 2022 ஜூன் முதல் கடந்த மார்ச் வரை, 2.58 கோடி ரூபாய் மதிப்பில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகள் வழியே, அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப் படுகின்றன. மக்களின் வறுமையை நீக்கி, வறுமை ஒழிப்பில் மற்ற மாநிலங்களுக்கு, தமிழகம் முன்னோடியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.