தமிழக கபடி நட்சத்திரங்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
தமிழக கபடி நட்சத்திரங்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
ADDED : அக் 27, 2025 12:55 AM

சென்னை: சர்வதேச கபடி போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற, ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் இடம் பெற்றிருந்த, அபினேஷ், கார்த்திகா ஆகியோருக்கு, சென்னை விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வளைகுடா நாடான பஹ்ரைனில், ஆசிய யூத் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், கபடி போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி, தங்கம் வென்று அசத்தியது.
இந்த அணியில் இடம் பெற்றிருந்த சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷ் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கார்த்திகா கூறியதாவது:
அனைவருக்கும் என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் சார்பில், இந்திய அணியில் விளையாடியது எனக்கு பெருமை.
அதற்கு துணை நின்ற என் பயிற்சியாளருக்கு அதிகம் கடமைப்பட்டு உள்ளேன். இது என் முதல் சர்வதேசப் போட்டி.
ஒரு புதிய அனுபவமாக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பின், தமிழகம் சார்பில் கபடி வீராங்கனையாக, நாட்டிற்காக கடல் கடந்து சென்று விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக முதல்வரிடம், கண்ணகி நகரின் வளர்ச்சிக்காக பல கோரிக்கைகளை வைத்துள்ளேன். விளையாட்டு மைதானங்கள் மற் றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும்படி கேட்டுள்ளேன்.
தமிழகம் முழுதும் பல சாதனையாளர்கள் உள்ளனர்; அவர்களுக்கு உரிய ஊக்கமும், உதவியும் கிடைத்தால், சர்வதேச போட்டிகளில் தமிழகம் மேலும் ஜொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அபினேஷ் கூறுகையில், ''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், ஆறு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறேன். எனது கனவை நனவாக்க உதவிய ஆணையத்திற்கு நன்றி. எனக்கு சிறப்பாக பயிற்சி அளித்த, என் பயிற்சியாளருக்கும் நன்றி,” என்றார்.

