மூடு விழா நடத்துவதில் தமிழகம் முன்னணி பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
மூடு விழா நடத்துவதில் தமிழகம் முன்னணி பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 22, 2025 11:11 PM
சென்னை:'துணை சுகாதார செவிலியர் பயிற்சி மையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. மூடு விழா நடத்துவதில், முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் முழுதும், 12 துணை சுகாதார செவிலியர் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திலும், ஆண்டுக்கு 60 பேர் பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் கிராமப்புற துணை சுகாதார செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கிராம துணை சுகாதார செவிலியர் என்ற பணியிடமே நிரப்பப்படவில்லை.
தமிழகம் முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், 3,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. பயிற்சி முடித்த 2,500 பேர், வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழகம் சுகாதாரத்தில், பின் தங்கிய மாநிலமாக மாறி கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, பணி நியமனங்கள் நடக்கவில்லை. இந்நிலை நீடித்தால், பயிற்சி மையங்கள் விரைவில் பூட்டப்படும். மூடு விழா நடத்துவதில், முன்னணி மாநிலமாக, தமிழகம் விளங்கி கொண்டிருக்கிறது.
முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, காலியாக உள்ள, துணை சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதன் வழியே செவிலியர் பயிற்சி மையங்கள் மூடப்படுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

