ADDED : ஜன 25, 2025 02:26 AM
சென்னை:'டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், தமிழகத்தில் தொழில் துவங்க, எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், 2025க்கான உலகப் பொருளாதார மாநாடு 3 நாட்கள் நடந்தது. இதில், மஹாராஷ்டிரா 15.70 லட்சம் கோடி, தெலுங்கானா 1.79 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
'வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழகம்'என்ற முழக்கத்துடன் பங்கேற்ற, தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை. இது, தமிழகத்திற்கு பெரும்தோல்வியாகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், கடந்த முறை மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம், இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. ஆனால்,தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, முதலீடுகள் குவிவதை போன்ற தோற்றத்தைஏற்படுத்த முயன்றுவருகிறது.
மூன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும், கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக,தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கிறது. வீண் பேச்சுகளையும், வெட்டி விளம்பரங்களையும் செய்வதை விடுத்து, அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகளை, எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

