டில்லி ஒப்புதலுக்கு காத்திருக்கும் தமிழக மெட்ரோ ரயில் திட்டங்கள்
டில்லி ஒப்புதலுக்கு காத்திருக்கும் தமிழக மெட்ரோ ரயில் திட்டங்கள்
ADDED : ஆக 29, 2025 02:00 AM

சென்னை: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் உட்பட, ஆறு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் கிடைக்காததால், அடுத்தகட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - ஆவடி - பட்டாபிராம், பூந்தமல்லி - பரந்துார்; மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை; கோவை அவிநாசி சாலை - கருமத்தம்பட்டி, உக்கடம் - சத்தியமங்கலம் என, மெட்ரோ ரயில் திட்டங்களை செயல் படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் எந்த ஒரு திட்டத்துக்கும், மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை புறநகரை இணைக்கும் விமானம் நிலையம் - கிளாம்பாக்கம் உட்பட மூன்று மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் தமிழக அரசின் ஒப்புதலை பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
ஓராண்டுக்கு மேல் ஆகியும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதன் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கடன் வசதி அல்லது நிதி உதவியை பெற முடியும்.
தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

