'வட்டியை குறைங்க ப்ளீஸ்' தமிழக அமைச்சர் வலியுறுத்தல்
'வட்டியை குறைங்க ப்ளீஸ்' தமிழக அமைச்சர் வலியுறுத்தல்
ADDED : மே 24, 2025 01:57 AM
சென்னை,:ஆர்.இ.சி., எனப்படும், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன்', பி.எப்.சி., எனப்படும், 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' ஆகிய நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டியை, 1.50 சதவீதம் குறைக்குமாறு, மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லாலிடம், தமிழக அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தினார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில், தென் மாநிலங்களின் மின் துறை அமைச்சர்கள் மாநாடு, நேற்று நடந்தது.
தமிழக மின் துறை அமைச்சர் சிவசங்கர், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிவசங்கர் பேசியதாவது:
மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' எனப்படும் ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், 'பவர் பைனான்ஸ்' எனப்படும் மின் நிதி நிறுவனம் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் குறைந்தது, 1.50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மேம்பட்ட செயலாக்க திறனையும், வணிக நம்பகத் தன்மையையும் கருதி, சில மாநிலங்களின் மீது மட்டும், சமமற்ற நிதி பொறுப்பு சுமத்தப்படுவதை தவிர்க்க, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்துக்கு, 'டிரான்ஸ்மிஷன்' கட்டணங்களில் இருந்து அளிக்கப்படும் விலக்கை திரும்ப பெறுவது காலத்தின் கட்டாயம்.
சத்தீஸ்கர் ராய்கர் - தமிழகம் புகளூர் - கேரளா திருச்சூர் உயர் மின் வழித்தடத்தை தேசிய சொத்தாக கருதி, அதற்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான மின் வழித்தட கட்டணங்கள், 'பயன்படுத்துவோர் செலுத்துதல்' கொள்கையின் அடிப்படையில் உண்மையான பயன்பாட்டு அளவின்படி விதிக்கப்பட வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகள், ஒவ்வொரு குறிப்பிட்ட எரிசக்தி ஆதாரங்களின் அடிப்படையில் வரையறுக்கப்படாமல், மாநிலங்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய எரிசக்தி ஆதாரங்களை தேர்வு செய்து கொள்ள, முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ் நிறுவனங்களிடம் இருந்து, பல்வேறு கட்டங்களாக தலா, 25,000 கோடி ரூபாய்க்கு மேல் மின் வாரியம் கடன் வாங்கியுள்ளது.
இதற்கான வட்டி, 10 - 12 சதவீதம் வரை உள்ளது. இதில், 1.50 சதவீதத்தை குறைக்க, தமிழகம் கோரிக்கை விடுத்து உள்ளது.