தமிழகத்திற்கு தேவை புதிய ரயில்கள்! பிரதமர் அறிவிக்க பயணிகள் எதிர்பார்ப்பு
தமிழகத்திற்கு தேவை புதிய ரயில்கள்! பிரதமர் அறிவிக்க பயணிகள் எதிர்பார்ப்பு
UPDATED : பிப் 28, 2024 06:20 AM
ADDED : பிப் 28, 2024 01:19 AM

விருதுநகர்: தமிழகத்தில் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் பிப்.24ல் 110 வயதைக் கடந்து பிரியா விடை பெற உள்ளது. முழு வீச்சில் ரூ.535 கோடிக்கு கட்டி முடிக்கப்பட்ட புதிய பாலத்தை பிரதமர் மோடி இன்று பிப். 28ல் திறந்து வைக்கிறார்.
ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு புதிய ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக உடுப்பி கிருஷ்ணர் கோயில் மங்களூர் முதல் ராமேஸ்வரம் வரையிலும், கொச்சி, எர்ணாகுளத்தில் இருந்து ஆலப்புழா, கொல்லம், செங்கோட்டை, விருதுநகர் வழியாக ராமேஸ்வரம் வரை புதிய தினசரி ரயில் இயக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொல்லம் - செங்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான வழித்தடங்கள் அகல ரயில் பாதையாகவும், மின்மயமாகவும் மாற்றப்பட்டு விட்டன.
ஏற்கனவே தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக அளவிலான வருவாய் கிடைத்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு நீட்டிப்பு ரயில்களை இயக்கும் போது மேலும் கூடுதலான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் சென்னை செல்லவே விரும்புகின்றனர்.
ஏனெனில் சென்னை எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பணி நிமித்தமாக எளிதில் சென்றுவர ரயில் பயணமே பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
இதற்காக வடமாநிலங்களில் இருந்து மதுரை வரை வரும் ரயில்களை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
மேலும் வடமாநிலங்களில் இருந்து கேரளா வழியாக நெல்லை வரை வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தையும் மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் சேலம், திருச்சி கோட்டங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை வரை கூடுதலான ரயில்களை இயக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக சென்னை எழும்பூர் வரை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் வண்டியை தினசரி ரயிலாக மாற்றம் செய்ய வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தென் மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் மதுரை, விருதுநகர், நெல்லை இடையே, செங்கோட்டை, விருதுநகர், மதுரை வரை 'எலெக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்' எனப்படும் ஈமு ரயில்களைஇரு மார்க்கங்களிலும் இயக்கவேண்டுமென பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

