ADDED : செப் 20, 2024 08:21 PM
புதுடில்லி:லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்களிடம இருந்து, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அக்கட்சி அமைப்பு செயலர் கேசவ விநாயகனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாம் என, சி.பி.சி.ஐ.டி.,க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., சார்பில், அக்கட்சி எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, அவருக்கு தொடர்புடைய நபர்களிடம் இருந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில், திருநெல்வேலிக்கு செல்லவிருந்த ரயிலில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி, பா.ஜ., அமைப்பு செயலர் கேசவ விநாயகனுக்கு சம்மன் அனுப்பினர்.
இதை எதிர்த்தும், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இதை கடந்த ஜூன் மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், 'நீதிமன்ற அனுமதி பெற்றே கேசவவிநாயகனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்' என்றது. எனினும், அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்தது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், கேசவவிநாயகனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அனுமதி வழங்கியது. ஒரு வாரத்திற்கு முனபே, நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றும் அமர்வு நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.