சந்தேகத்துக்குரிய சமூக வலைதள பதிவுகள் மத்திய அரசுக்கு தமிழக போலீஸ் கடிதம்
சந்தேகத்துக்குரிய சமூக வலைதள பதிவுகள் மத்திய அரசுக்கு தமிழக போலீஸ் கடிதம்
ADDED : ஏப் 13, 2025 02:30 AM

சென்னை: இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் சந்தேகத்திற்கிடமான பதிவுகளை கண்டறிந்து அகற்றுவதற்கான செயல்முறையை வகுக்க, மத்திய, 'சைபர்' ஒருங்கிணைப்பு மையத்திற்கு, தமிழக 'சைபர் கிரைம்' போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
பிரபலங்கள் பற்றிய தலைப்பு செய்திகள் என்ற இணைப்புடன், வர்த்தகம், 'கிரிப்டோ கரன்சி' மற்றும் பிற நிதித் திட்டங்களில், போலியாக முதலீட்டு வாய்ப்பு ஊக்கவிக்கப்பட்டு, மக்களை ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பிரபலங்களின் பெயரில் போலியான செய்திகள், 'எக்ஸ்' தளத்தில் அதிகளவில் பகிரப்படுகின்றன.
பரபரப்பான தலைப்பு வாயிலாக, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அவர்கள், போலி வலைதள இணைப்பு வாயிலாக, முதலீட்டு ஆர்வத்தை துாண்டுகின்றனர்.
குறிப்பாக வருமான வரித்துறையும் நீதித்துறை அமைப்பும், இவ்விஷயத்தை மறுஆய்வு செய்ததாகவும், முதலீட்டு தளம் சட்டப்பூர்வமானது, நம்பகமானது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற மோசடி தொடர்பாக, 'எக்ஸ்' தளத்தில், 25; 'பேஸ்புக்' தளத்தில், 15 வலைதளங்களை அடையாளம் கண்டு, தமிழக சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக சைபர் கிரைம் போலீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பு:
'எக்ஸ்' தளத்தை, மோசடிக்கு அதிகம் பயன்படுத்துவதை தடுக்குமாறு, அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சந்தேகத்திற்கு இடமான பதிவுகளை கண்டறிந்து அகற்ற, செயல்திட்டத்தை வகுக்க, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 'சைபர்' ஒருங்கிணைப்பு மையத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில், இதுபோன்ற பதிவுகள் கண்டறிந்து நீக்கப்பட்டு வருகின்றன. சரிபார்க்கப்படாத ஆதாரங்கள் வாயிலாக ஊக்குவிக்கப்படும் முதலீட்டுத் திட்டங்கள், வர்த்தக தளங்கள், பிரபலங்களால் அங்கீகரிக்கப்பட்டதாக தோன்றினாலும், அவற்றை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.