தனியாரிடம் ரூ.28,772 கோடிக்கு மின்சாரம் வாங்கியது தமிழகம்
தனியாரிடம் ரூ.28,772 கோடிக்கு மின்சாரம் வாங்கியது தமிழகம்
UPDATED : டிச 14, 2025 02:30 AM
ADDED : டிச 14, 2025 02:26 AM

சென்னை: தமிழக மின் வாரியம், கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 76,000 கோடி ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்து உள்ளது.
தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கியது மட்டும், 28,772 கோடி ரூபாய். மின்சாரம் எடுத்து வந்ததற்கான மின் வழித்தட செலவு, 10,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது.
ஒப்பந்தம் அதில், வாரியத்தின் மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 4,500 மெகா வாட் அளவிற்கே கிடைக்கிறது. மீதமுள்ள மின்சாரம், மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப் படுகிறது.
அப்படியும் மின்சாரம் போதவில்லை எனில், மின்சார சந்தைகளில் இருந்தும் வாங்கப்படுகிறது. ஒப்பந்தம் செய்து தனியாரிடம் வாங்கப்படும் மின்சாரத்தின் விலை யூனிட், 6 - 7 ரூபாயாக உள்ளது.
மத்திய மின்சாரம், தனியார் காற்றாலை, சூரியசக்தி மின்சார விலை குறைவாக இருக்கிறது. மின்சார சந்தையில் வாங்கப்படும் விலை சராசரியாக, யூனிட் 10 ரூபாயாக உள்ளது.
கொள்முதல் கடந்த நிதியாண்டில் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும், 11,442 கோடி யூனிட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு, 75,960 கோடி ரூபாய்.
இதில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவாக, 28,772 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டு உள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரம், மத்திய மின் வழித்தடத்தில் எடுத்து வரப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டில், 9,723 கோடி ரூபாய் செலவாகிஉள்ளது.
கடந்த, 2023 - 24ல் மொத்த மின் கொள்முதல், 74,349 கோடி ரூபாயாக இருந்தது.

