மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மத்திய அரசு தர தமிழகம் கோரிக்கை
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மத்திய அரசு தர தமிழகம் கோரிக்கை
ADDED : டிச 17, 2024 05:42 AM
சென்னை : 'தமிழக அரசு சார்பில், மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும், 1,500 ரூபாய் உதவித்தொகையை, மத்திய அரசு ஏற்று வழங்க வேண்டும்' என, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.
மத்திய ஆலோசனை வாரியத்தின் ஏழாவது குழு கூட்டம், டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் மதிவேந்தன், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டையின் தரவு தளத்தை, தமிழக அரசு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மாநில ஆணையர் அலுவலக உருவாக்கத்திற்கு, 2.21 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்.
புற உலகச் சிந்தனை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான, உயர்தனி சிறப்பு மையத்தை மேம்படுத்த, 25 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விடுவிப்பு நிலை குறித்த ஆண்டறிக்கையை, மாநில அரசுக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டும். தடையற்ற சூழல் உருவாக, மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 29 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும்.
மத்திய அரசால், 63,000 பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்படும், இந்திரா காந்தி மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையினை, மேலும், 5.29 லட்சம் பயனாளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
தமிழக அரசின் வருவாய் துறை வாயிலாக, தற்போது வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயை, மத்திய அரசு ஏற்று வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

