தமிழகத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி தந்தது யார்?: நிர்மலாவுக்கு ஸ்டாலின் கேள்வி
தமிழகத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி தந்தது யார்?: நிர்மலாவுக்கு ஸ்டாலின் கேள்வி
UPDATED : ஏப் 03, 2024 08:31 PM
ADDED : ஏப் 03, 2024 08:08 PM

திருவண்ணாமலை: ரூ. 5 ஆயிரம் கோடி கொடுத்தது மத்திய அரசு தானா என கூறமுடியுமா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
லோக்சபா தேர்தலில் திருவண்ணாமலை, ஆரணி லோக்சபா தொகுதி தி.மு.க,வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் சோ.காட்டுகுளம் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது, வரலாற்றின் பக்கங்களை புரட்டினால்,தி.மு.க.வையும், திருவண்ணாமலையையும் என்றுமே பிரிக்கவே முடியாது. நான் எல்லோருக்கும் சொல்வது, வரும் தேர்தல் நமக்கு இரண்டாவது சுதந்திர போராட்டம்.
தி.மு.க, விற்கு ஆற்றல் மிகுந்த உறுப்பினர்களை தந்த மண் எது என்றால் அது இந்த திருவண்ணாமலை தான். இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்கு தான். மக்களாட்சியும், நாட்டு மக்களும் எஜமானர்கள் என அண்ணா கூறினார்.
தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய்யும்,புரளியும் கிளப்புகிறார் பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரத்தில் தாம் சொன்னால் மக்கள் நம்பமாட்டார்கள் என்பதற்காக ஆர்.டி.ஐ.,யை மூலம் புரளியை கிளப்புகிறார். உத்திரபிரதேசத்திற்கு போய் கச்சத்தீவு பற்றி மோடி பேசுவதிலிருந்தே அவர் குழப்பத்தில் இருப்பது தெரியவரும்.
ரூ. 5 ஆயிரம் கோடி யார் தந்தது ?
மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டம் என்ன? அரசியலமைப்பு சட்டத்தை காக்க, இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மையை காக்க வேண்டுமென்றால் பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி நிதி கணக்கை கேட்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அத்தொகை மத்திய அரசு தந்தது என கூறமுடியுமா ? தமிழகத்திற்கு ரூ. 5 ஆயிரம் மோடி தரப்பட்ட தொகை சர்வதேச வங்கி தந்த கடன் தொகை.
கந்துவட்டிகாரன் போல நிதி அமைச்சர்
மிக்ஜாம் புயல் பாதித்த போது தமிழகத்திற்கு உதவ மத்திய அரசிடம் பணம் உள்ளது .ஆனால் மனம் இல்லை. வாழைப்பழ காமெடி போலநிதி வழங்கியதாக கதை சொல்கிறது மத்திய அரசு. ஒரு ரூபாய் கூட நிதி தராமல் கந்து வட்டிக்காரன் போல நிதி அமைச்சர் கணக்கு கேட்கிறார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தான் ரூ. 37 ஆயிரம் கோடியை கொடுங்கள் என கேட்கிறோம். ஆனால் வழக்கமாக தரும் பேரிடர் நிதியை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் . பிரதமர் மோடியை போல நிதியமைச்சரும் வா்யால் வடை சுடுகிறார். உலக நிதி அமைப்பிலிருந்து மாநில அரசு கடன் வாங்குவது எப்படி மத்திய அரசு நிதியாகும். மக்களை குழப்பி ஏமாற்றிவிடலாம் என மோடி கனவு காண்கிறார்.
ரூ.500கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுககு செய்துள்ளது திமுக அரசு. கூவத்தூர் கவனிப்புகளால் முதல்வர் ஆனவர் பழனிசாமி. மெகா சீரியல் எடுக்கும் அளவிற்கு துரோகங்கள் நிறைந்த கதை தான் பழனிசாமி கதை என்றார்.
விசாரணை அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்கிறார் மோடி. மோடி சொல்வதை நாங்களும், நாட்டு மக்களும் நம்பிவிட்டோம். பா.ஜ., ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும், என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். ஜூன் 4-ம் தேதி இந்தியாவிற்கு புதிய விடுதலையின் துவக்க நாள். நாடும் நமதே, நாற்பதும் நமதே.
நாங்கள் மதத்திற்கு எதிரி அல்ல!
யார் ஆள வேண்டும்? யார் ஆளக்கூடாது? என்று சொல்லாமல், யார் உண்மையான எதிரி? என்று தெரியாமல், எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவு இல்லாமல்? இருக்கிறது அ.தி.மு.க.,
தமிழர்கள் பா.ஜ.,வை போல் அடக்க நினைப்பவர்களையும், அ.தி.மு.க.,வை போல் அடிமையாக இருப்பவர்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்கு தான் நாங்கள் எதிரிகள்; மதத்திற்கு அல்ல.
முதல்வராக பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடக்கும் அரசு விழாவில் தான் அதிகம் கலந்து கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

