சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டினால் ஆனைமலை புலிகள் காப்பகம் பாதிக்கும் தீர்ப்பாயத்தில் தமிழகம் அறிக்கை
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டினால் ஆனைமலை புலிகள் காப்பகம் பாதிக்கும் தீர்ப்பாயத்தில் தமிழகம் அறிக்கை
ADDED : ஜன 04, 2025 12:38 AM

சென்னை:'சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரளா தடுப்பணை கட்டினால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு பாதிப்பு ஏற்படும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக வனத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில், அமராவதியின் துணை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
இதுகுறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தமிழக வனத் துறை தலைவர் சீனிவாச ராமச்சந்திர ரெட்டி தாக்கல் செய்துள்ள அறிக்கை:
அமராவதி ஆற்றின் நீர்வரத்தை நம்பித்தான் அமராவதி அணை உள்ளது. அதன் கிளை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரளா தடுப்பணை கட்டினால், அமராவதி அணைக்கு நீர் செல்வது தடைபடும்.
அமராவதி ஆற்றிலும், அணையிலும் நீர் ஓட்டம் குறைவது, அமராவதி அணையை சார்ந்துள்ள வனவிலங்குகள், தாவரங்களை பாதிக்கும்.
மூன்று தேசிய பூங்காக்கள், இரண்டு வன விலங்கு சரணாலயங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும்.
அமராவதி அணையின் நீர் இருப்பு பகுதிக்குள் உள்ள பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கும்; வன விலங்குகளின் வாழ்விட சூழல் சிதையும். இவற்றை தீர்ப்பாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தீர்ப்பாயத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கேரள அரசு வழக்கறிஞர், 'குடிநீர் தேவைக்காக, ஒரு மீட்டர் உயரத்தில் சிறிய தடுப்பு மட்டுமே ஏற்படுத்துகிறோம். இதனால், அமராவதி அணைக்கு நீர் செல்வது தடைபடாது' என்றார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், அமராவதி அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விடும்' என்றார்.
அதைத் தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் விஜய் குல்கர்னி ஆகியோர், இது தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

