தமிழக வெற்றிக்கழகம் திடீர் ஆர்ப்பாட்டம் வீட்டில் இருந்து விஜய் கண்காணிப்பு
தமிழக வெற்றிக்கழகம் திடீர் ஆர்ப்பாட்டம் வீட்டில் இருந்து விஜய் கண்காணிப்பு
ADDED : ஏப் 04, 2025 10:29 PM
சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தினர் மாநிலம் முழுவதும் நடத்திய ஆர்ப்பாட்டத்தை, வீட்டில் இருந்தபடி அக்கட்சி தலைவர் விஜய் கண்காணித்தார்.
பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, த.வெ.க., சார்பில், நேற்று மாநிலம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி ரீதியாக உள்ள 120 மாவட்ட செயலர்களும் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். இதில், த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். அம்பத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
வக்ப் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனால், ஏற்படும் பாதிப்புகளை விளக்க, விஜய் விவரமான அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்றைக்கும் முஸ்லிம்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
முஸ்லிம்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளக்கூடாது. இதற்காக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு ஆனந்த் கூறினார்.
செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில், மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில், ஆர்பாட்டம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்லாவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் முன் அனுமதி பெறாமல், பந்தல் போட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசார் சென்று பந்தலை அப்புறப்படுத்தினர். இதேபோல், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் 800 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலம் முழுதும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
மூன்று கோஷ்டி ஆர்ப்பாட்டம்
துாத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே த.வெ.க., சார்பில் மாவட்ட பொறுப்பாளர் என கூறி கொள்ளும் அஜிதா ஆக்னல் தலைமையில் காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து, மத்திய மாவட்ட பொறுப்பாளர் என கூறி கொள்ளும் சாமுவேல்ராஜ் தலைமையில் 11:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், சமீபத்தில் கட்சியில் இணைந்ததாக கூறும் நிர்வாகி முருகன் தலைமையில் 12:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒரே இடத்தில் ஒரு மணிநேர இடைவெளியில், தனித்தனியே அடுத்தடுத்து த.வெ.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், எந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என தொண்டர்கள் குழம்பினர்.
த.வெ.க.,வில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துாத்துக்குடி மாவட்டத்திற்கு இன்னும் மாவட்டச்செயலர் உள்பட நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.
இதனாலேயே, மூன்று கோஷ்டிகளாக செயல்படுவோர், தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.