தி.மு.க.,விடமிருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படும்: நாகேந்திரன்
தி.மு.க.,விடமிருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படும்: நாகேந்திரன்
ADDED : ஆக 06, 2025 04:12 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
கடந்த ஜூன் 12ம் தேதி காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு இருந்தாலும், டெல்டாவின் கடைமடை பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு, நீர் இன்னும் முழுதுமாக வந்து சேராததால், குறுவை பயிர்கள் காய்ந்து வருகின்றன.
ஆறுகள் பெருக்கெடுத்து, அணைநீர் திறந்து விடப்பட்டாலும், பயிர்கள் வாடி போகின்றன. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கியும் ஆறுகள், வாய்க்கால், கால்வாய் போன்றவை முறையாக துார்வாரப்படுவதில்லை. முக்கிய ஆறுகளில் நீர்வரத்து நிரம்பியும், கிளை ஆறு, வாய்க்கால் எல்லாம் வறண்டு கிடக்கின்றன.
பாசன தேவைகளை பூர்த்தி செய்வதாக கூறி, நீர்வளத் துறையை உருவாக்கி விளம்பரப்படுத்தி கொண்ட தி.மு.க., அரசு, வழக்கம்போல துறை செயல்பாடுகளில் கோட்டை விட்டுவிட்டது. இனியும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல் இருந்தால் பேராபத்தில் முடியும்.
அழிவை நோக்கி செல்லும் நீர்நிலைகளை பாதுகாக்க தான், தமிழக பா.ஜ., சார்பில், 'நீர்வளம் காப்போம்' என்ற பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. தி.மு.க., என்னும் தீய சக்தியிடம் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

