கர்நாடகாவின் ஒவ்வொரு முயற்சியையும் தமிழகம் முறியடிக்கும்: துரைமுருகன் அறிவிப்பு
கர்நாடகாவின் ஒவ்வொரு முயற்சியையும் தமிழகம் முறியடிக்கும்: துரைமுருகன் அறிவிப்பு
ADDED : நவ 14, 2025 01:01 AM
சென்னை:'காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை, தி.மு.க., அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்காது' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை, கர்நாடக அரசு தன்னிச்சையாக தயாரித்து, மத்திய நீர்வள குழுமத்திடம் 2018ல் சமர்ப்பித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
தீர்மானம் இதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை ஆய்வுக்கு ஒப்புதல் பெற, மத்திய சுற்றுச்சூழல் துறையை 2020ல் கர்நாடக அரசு அணுகியது. அப்போதும், உச்ச நீதிமன்றத்தை அணுகி, தமிழக அரசு தடுத்து நிறுத்தியது. அதை தொடர்ந்து, கர்நாடக அரசின் பட்ஜெட்டில், மேகதாது அணை கட்ட, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 2022 மார்ச் 31ல் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2022 மார்ச் 31, மே 26ம் தேதிகளில், பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போது, 'மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது' என, மத்திய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தினார்.
இந்த காலக்கட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, 'கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது' என மத்திய அரசு கருத்து தெரிவித்தது. இதை எதிர்த்து, 2022 ஜூன் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இவ்வாறு தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால், இன்று வரை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, '2025 - -26ல் தமிழகத்திற்கு கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளது. மேகதாது அணையால், தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது' என்று கூறிஇருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
அதிக மழை பொழிவு இருக்கும் ஆண்டுகளில், வேறு வழியின்றி தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீரை திறந்து விடுகிறது. ஆனால், வறட்சி ஆண்டுகளில், நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை.
மேகதாது அணை கட்டப்பட்டால், வறட்சி ஆண்டுகளில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும்.
நீர்வளக் குழு எனவே, மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழக விவசாயிகளை மிகவும் பாதிக்கும். காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பான நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும்.
இந்நிலையில், மேகதாது அணை தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் கருத்துகள் அனைத்தையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வள குழுமத்திடம் தெரிவிக்கலாம்.
'தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது' என உத்தரவிட் டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியதை போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திடம், தமிழக அரசு வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக, சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தக்கது. இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தி.மு.க., அரசு, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது. புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

