உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்பு 50 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்கள் மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்
உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்பு 50 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்கள் மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்
ADDED : ஜூன் 12, 2025 06:28 AM
சென்னை: 'உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்களில், 50 சதவீதம் முழுதும், மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில், 50 சதவீத இடங்கள், மாநில அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அதன்படி, நீட் - எஸ்.எஸ்., தேர்வில், மாநில இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு, மே 27ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, 29ம் தேதி, அரசு பணியில் உள்ளவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய அனுமதிக்கும் வகையில், இரண்டாவது சுற்று கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கான அட்டவணையை குறிப்பிடுமாறு, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தை, தமிழக தேர்வு குழு முறையாக கேட்டுக்கொண்டது.
இதே கோரிக்கையை அரசு டாக்டர்களும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்காமல், நிரப்பப்படாத இடங்களை, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது; இது, தமிழக அரசு டாக்டர்களை பாதிக்கும் செயல்.
அவர்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்யவோ அல்லது கலந்தாய்வில் பங்கேற்கவோ, அவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கிறது.
எனவே, மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழகத்தில் பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட, 50 சதவீத இடங்களும் அவசியம். மாநில அளவிலான நீட் - எஸ்.எஸ்., கலந்தாய்வு இரண்டாவது சுற்றில், அவை அரசு டாக்டர்களுக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.