தமிழக அரசியல் களம் பா.ஜ.,வால் மும்முனை களமாக மாறியுள்ளது
தமிழக அரசியல் களம் பா.ஜ.,வால் மும்முனை களமாக மாறியுள்ளது
UPDATED : பிப் 10, 2024 03:01 AM
ADDED : பிப் 10, 2024 01:41 AM

திண்டுக்கல்:''50 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவும் இரு முனை அரசியல் களம், பா.ஜ.,வின் வளர்ச்சியால் மும்முனை களமாக மாறியிருக்கிறது,'' என தமிழக பா.ஜ., பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதைப் போன்று சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகவும் விரைவில் அலுவலகம் திறக்கப்படும். பிப்.11ல் சென்னையில் பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. தமிழகத்திற்கு பிப்.25ல் பிரதமர் நரேந்திரமோடி வருகிறார்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும். ஹரியானா,அஸ்ஸாம்,மேற்குவங்க மாநிலங்கள் வரிசையில் தமிழகத்திலும் பா.ஜ., வேகமான வளர்ச்சியைப் பெறும். அதை உறுதி செய்யும் வகையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமையும். வெற்றியை விட வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பா.ஜ., முயற்சிக்கிறது.
50 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவும் இரு முனை அரசியல் களம், பா.ஜ.,வின் வளர்ச்சியால் மும்முனை களமாக மாறியிருக்கிறது.
பொது சிவில் சட்டம் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் தான் வாக்கு மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்துவதற்காக தனித் தனிச் சட்டம் இருக்கிறது.
இந்த நிலையை மாற்றும் வகையில் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் போது அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய நிலை உருவாகும். பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள், பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு தனிச் சட்டம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.6 லட்சம் கோடிக்கான முதலீட்டை பெற்று வந்திருப்பதாக கூறியிருக்கிறார். அதில் தென் தமிழகத்திலுள்ள 15 மாவட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட முதலீடு கிடைக்கவில்லை என்றார்