ADDED : ஜன 25, 2024 01:05 AM
சென்னை:தமிழகத்தின் மின் நுகர்வு நேற்று முன்தினம் 16,300 மெகா வாட்டை தாண்டியது. சென்ற ஆண்டு ஜனவரியில இருந்த உச்சபட்ச நுகர்வை காட்டிலும் இது 1,000 மெகாவாட் அதிகம்.
சராசரியாக 15,000 மெகா வாட் என்ற அளவில் உள்ள தமிழக மின்நுகர்வு, கோடையில் அதிகரிப்பது வழக்கம். கடந்த ஏப்ரலில் அதிகபட்சமாக 19,387 மெகா வாட்டை எட்டியது.
அதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. ஏர்கண்டிஷனர் பயன்பாடு அதிகரிப்பதால் கோடையில் மின் நுகர்வு உயர்கிறது.
ஆனால், இந்த ஆண்டு முதல் மாதத்திலேயே 1,000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்திருப்பது எதிர்பாராதது. பனிக் காலமாக இருந்தும் பகலில் வெயில் சுட்டெரிப்பதால், 'ஏசி' பயன்பாடும் அதிகமாகி இருக்கும் என கூறப்படுகிறது.
கோடையில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனால் நாடு முழுதும் மின் தேவை கணிசமாக அதிகரிக்கும். அப்போது மின் தேவை 20,744 மெகா வாட்டாக இருக்கும் என மத்திய மின் துறை கணக்கிட்டுள்ளது.
ஜனவரியிலேயே 16,000 மெகா வாட்டை தாண்டியதால், கோடையில் தேவை 21,000 தாண்டுமோ என மின் வாரியம் கவலைப்படுகிறது.