தகவலின்றி முடங்கும் 'தமிழ் நிலம் ஜியோ செயலி' ஒன்பது மாதங்களாக 'அப்டேட்' இல்லை
தகவலின்றி முடங்கும் 'தமிழ் நிலம் ஜியோ செயலி' ஒன்பது மாதங்களாக 'அப்டேட்' இல்லை
ADDED : அக் 27, 2025 12:47 AM
சென்னை: நிலத்தின் சர்வே எண், பட்டா, வரைபட விபரங்களை, மக்கள் எளிதாக அறிவதற்காக துவக்கப்பட்ட, 'தமிழ் நிலம் ஜியோ செயலி' முழுமையான தகவல்கள் இல்லாமல், முடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நிலங்கள் குறித்த வருவாய் துறை ஆவணங்கள் மற்றும் தகவல்கள், தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் இணைக்கப்பட்டு உள்ளன.
இதில், ஒரு குறிப்பிட்ட நிலத்தின் அமைவிடம், சர்வே எண் விபரங்களை உள்ளீடு செய்தால், அதன் பட்டா விபரங்களை மக்கள் அறியலாம்.
பதிவிறக்கம் இந்த வசதியை எளிமைப்படுத்தும் வகையில், 'தமிழ் நிலம் ஜியோ இன்போ' என்ற புதிய செயலி, இந்த ஆண்டு ஜனவரியில் துவக்கப்பட்டது. இந்த செயலியை, பொதுமக்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து எளிதாக பயன்படுத்தலாம் என்றும், வருவாய் துறை அறிவித்தது.
அதாவது, மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் போன்ற விபரங்களை உள்ளீடு செய்து, பட்டா, 'அ' பதிவேடு, நில வரைபட விபரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, சர்வே எண் போன்ற அடிப்படை விபரங்கள் இல்லாவிட்டாலும், கூகுள் வரைபடத்தில் நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் சர்வே எண், பட்டா எண், வரைபட விபரங்களை அறியவும் வசதி செய்யப்பட்டது.
புதிதாக வீடு, மனை வாங்கும் மக்கள், இந்த செயலியை பயன்படுத்தி, சொத்துக்கள் குறித்த உண்மையான தகவல்களை பெறலாம் என, வருவாய் துறை தெரிவித்தது.
ஆனால், அந்தத் துறையின் அதிகாரிகள், இந்த செயலியில் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்யாமல் முடக்கி வைத்துள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
நிலம் தொடர்பான விபரங்களை, பொதுமக்கள் மொபைல் போன் வாயிலாக எளிதாக அறிய, முதல்வர் அறிவிப்பு அடிப்படையில், இந்த செயலி உருவாக்கப்பட்டது.
வசூல் பாதிக்கும் செயலி முறையாக செயல்பட்டால், நில விபரங்களை தேடி பொது மக்கள், கிராம நிர்வாக அலுவலர் முதல் தாசில்தார் வரை உள்ள அதிகாரிகளை நாடி செல்ல வேண்டியதிருக்காது.
ஆனால், அவ்வாறு நடந்தால், தங்களுக்கான வசூல் பாதிக்கப்படும் என்பதால், வருவாய் துறையினர், இதில் உரிய தகவல்களை பதிவேற்றம் செய்ய மறுப்பதாக தெரிகிறது.
இது போன்ற வசதியை துவக்கி வைத்த அதிகாரிகள், இதன் தொடர் செயல்பாடுகளை கண்காணிக்க தவறியதே, பிரச்னைக்கு காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் பயன்படுத்தலாம் தமிழ் நிலம் செயலியில், அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், ஊரக பகுதி சார்ந்த தகவல்கள் கிடைக்கும் அளவுக்கு, நகர்ப்புற பகுதி நில விபரங்கள் கிடைப்பதில்லை. இதில், காணப்படும் குறைபாடுகளை சரி செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் மக்கள் இந்த செயலியை முழுமையாக பயன்படுத்தும் நிலை ஏற்படும். - வருவாய் துறை உயரதிகாரி

