ADDED : மே 14, 2026 02:30 AM

சென்னை: முதுபெரும் தமிழறிஞரும் பேராசிரியருமான இ.சுந்தரமூர்த்தி, 84, நேற்று காலமானார்.
கோவை மாவட்டம், வெள்ளலுாரில் பிறந்தவர் இ.சுந்தரமூர்த்தி. இவர், மானிடவியல், கல்வெட்டு துறை படிப்புகளுடன், திருக்குறள் பரிமேலழகர் உரை குறித்து ஆய்வு செய்து, முனைவர் பட்டமும் பெற்றவர்.
தஞ்சை தமிழ் பல்கலை யின் துணை வேந்தர், சென்னை பல்கலை தமிழ் துறை மற்றும் பதிப்புத் துறைகளின் தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் இலக்கியம், இலக்கணம் குறித்து, 65 ஆய்வு நுால்களை எழுதினார். தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உள்ளிட்டவற்றை பெற்றதுடன், செந்தமிழ் செல்வர், குறள் ஞாயிறு, தமிழ் மாமணி உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றவர்.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இன்று காலை 10:00 மணிக்கு, சென்னை பெருங்குடி, திருமலை நகர் இணைப்பு, பாரதி தெரு 16ம் எண் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடக்க உள்ளன.
