தடுமாற்றத்தில் தமிழ் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு நடைபெறாமல் முடக்கம்
தடுமாற்றத்தில் தமிழ் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு நடைபெறாமல் முடக்கம்
UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 08:37 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர், தமிழ்பல்கலைகழகத்தில், இரண்டு ஆண்டுகளாக, பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஆள்பாற்றக்குறையால், நிர்வாகம் தடுமாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சாவூர், தமிழ்பலக்லைகழகம், கடந்த 1981ம் ஆண்டு செப்.15ம் தேதி, தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டினை முதன்மையான, உயர் ஆய்வை நோக்கமாக கொண்டு, உருவாக்கப்பட்டது. இப்பல்கலைகழகத்தில், 24 துறைகள் செயல்படுகிறது. ஓலைச்சுவடி டிஜிட்டல் மயம், நுால்கள் வெளியீடு மற்றும் பதிப்பு, கடல் சார்ந்த ஆராய்ச்சி என பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன். தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் கட்டுபாட்டில் உள்ளன.
பல்கலைகழகத்தில் 89 பேராசிரியர்களும், 222 அலுவல் நிலைப்பணியாளர்களும் பணியாற்ற வேண்டும். ஆனால், 30 பேராசிரியர்கள், 135 அலுவல் நிலைப்பணியாளர்கள் காலி பணியிடங்கள் உள்ளதால், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. மேலும், அலுவல் நிலைப்பணியாளர்களுக்கு, எட்டு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளன.
இதனால், கடந்த 2018ம் ஆண்டுக்குப் பிறகு, ஏழு ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் தயாரிக்கப்படாமல் உள்ளன. 2019ம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டு தோறும் நடத்தப்படவேண்டிய பேரவைக்கூட்டம் நடத்தப்பெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கான பட்டம் வழங்கவில்லை. மேலும், போதிய நிதி வழங்கப்படாததால், பல்கலைகழகம் தடுமாற்றத்தில் உள்ள சூழலில், தமிழ்வளர்ச்சி துறை பல்கலைகழகத்தை கண்டுக்கொள்ளவில்லை என பல்வேறு தரப்புகளில் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பல்கலைகழக அலுவல் நிலைப் பணியாளர்கள் சங்க தலைவர் சக்தி சரவணன் கூறியதாவது: தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய நுாலகத்தில், ஒரு நுால அலுவலர் மட்டுமே பல ஆண்டாக உள்ளனர். நுாலகத்தில் எட்டு காலிப்பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளதால், பல அரிய நுால்கள் சரியாக பராமரிக்க இயலாத நிலை வீணாகி வருகிறது. ஆள்பாற்றக்குறை போன்ற காரணங்களால், அரசின் நிதியை பெற முடியவில்லை. பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படாமல் உள்ளது. பல்கலைக்கழக ஆண்டறிக்கைகள் வெளியிடப்படாமல் உள்ளது. தேர்வுப் பிரிவு போன்ற முக்கியமான பிரிவுகளில் இருக்கைப்பணியாளர்கள் மட்டுமே கூடுதல் பணிச்சுமையுடன் பணியாற்றுகின்றனர். அங்கு கண்காணிப்பாளர், உதவிப் பதிவாளர் போன்ற உயர் அதிகாரிகளே இல்லாத நிலை உள்ளது. இத்தகைய நிலையில் பதிவுறு எழுத்தர், இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்களில் பணியாற்றுவோர், பதவி உயர்விற்கான தகுதிகள் இருந்தும் எட்டு ஆண்டுகளாக பதவி உயர்வு பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக துணை வேந்தர் இல்லாத நிலையில், சுமார் ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
