'உயர்நீதிமன்றத்தில் தமிழ் விரைவில் வழக்காடும் மொழியாக மாறும்'
'உயர்நீதிமன்றத்தில் தமிழ் விரைவில் வழக்காடும் மொழியாக மாறும்'
ADDED : பிப் 18, 2024 05:59 AM

தேனி : 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசினார்.
தேனி சட்டக்கல்லுாரியில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நடந்தது. போட்டி நிறைவு, பரிசளிப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசுகையில், 'சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் எழுதப்பட்ட காரணத்திற்காக தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது வரலாறு.
தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தில் '4 பி' என்ற பிரிவு சேர்க்கப்பட்டு தமிழ் ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி சுவாமி,' நீதிபதிகள் விரும்பும் மொழில் தீர்ப்பு எழுதாலம்' என சுற்றறிக்கை அனுப்பினார். அதைத்தொடர்ந்து பெரும்பாலான நீதிபதிகள் தமிழில் தீர்ப்பு எழுதுகிறார்கள்.
தமிழகத்தில் உயர்நீதிமன்றம் தவிர பிற நீதிமன்றங்களில் தமிழ் வழக்கு மொழியாக உள்ளது. தமிழ்மொழி உயர்நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக மாறும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.
மாணவிகள் அதிகம் சட்டம் படிப்பது மகிழ்ச்சி. சட்டத்துறையில் முதன்னை பொறுப்புகளில் பெண்கள் பெரிய அளவில் அங்கம் வகிக்கிறார்கள்.
நீதிபதி தேர்வுகள் முடிவில் வென்றவர்களில் 245 பேரில் 128 பேர் பெண்கள். முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணாசாண்டியை மாணவர்கள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்றார்.
மாநில தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியில் விழுப்புரம் சட்டக்கல்லுாரி முதல்பரிசும், சேலம் சட்டக்கல்லுாரி 2ம் பரிசு பெற்றன.
விழாவில் மாநில சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, சட்டக்கல்லுாரி முதல்வர்கள் சண்முகப்பிரியா (தேனி), துர்கா லட்சுமி (சேலம்), ராமபிரான் ரஞ்சித்சிங்(காரைக்குடி), சிவதாஸ்(தர்மபுரி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.