ADDED : அக் 04, 2024 07:24 PM
சென்னை:''தி.மு.க., எதை செய்கிறதோ, அதேபோல் தான் நடிகர் விஜய் கட்சியும் செய்கிறது; இரட்டை வேடம் வேண்டாம்,'' என, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய, மாநில அரசுகள் இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், நல்லுறவை கடைபிடிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். தேசப்பிதா காந்தியை, திருமாவளவன் கொச்சைப்படுத்தி மிக மோசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்; நாகரிகமான தலைவர் அல்ல.
நடிகர் விஜய், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'மற்ற கட்சிகளை போல் நம் கட்சி சாதாரண கட்சி அல்ல' என்று குறிப்பிட்டிருக்கிறார். எத்தனையோ ஆண்ட கட்சிகள் உள்ளன. பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளுக்கு மத்தியில் விஜய் கட்சி எந்தளவிற்கு உயர்ந்துள்ளது?
விஜய் தன் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறில்லை. மற்ற கட்சிகளையும், அதன் தலைவர்கள், தொண்டர்களையும் மதிக்க வேண்டும். அவர் கட்சியினர் மாநாட்டிற்கான பூஜையை மஞ்சள் உடை அணிந்து, நேரம், காலம் பார்த்து தான் அனைத்தும் செய்துள்ளனர்.
தி.மு.க., எதை செய்கிறதோ, அதேபோல் தான் விஜய் கட்சியும் செய்கிறது. இரட்டை வேடம் வேண்டாம். கட்சி கொள்கையை வெளிப்படையாக விஜய் தெரிவிக்க வேண்டும்.
பிரதமர் மோடி, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாராபட்சம் காட்டுவதில்லை. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை செயல்படுத்தாதது ஏன் என்பதை, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.