ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்; தமிழிசை குற்றச்சாட்டு
ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்; தமிழிசை குற்றச்சாட்டு
ADDED : ஆக 25, 2025 05:36 PM

கோவை: ஹிந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜ மூத்த நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது; முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் எந்தவித இந்துமத நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைத்துள்ள உலக ஐயப்ப மாநாடு நிகழ்ச்சிக்கு செல்கிறார். இது எந்தவிதமான நம்பிக்கை என அவர்கள் கூற வேண்டும். ஹிந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளன.
ஹிந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர் என்கிற அடிப்படையில் விசிக வன்னியரசு ராமர் குறித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சமூக நீதியையும் சமத்துவத்தையும் போற்றுவது கம்பராமாயணமும், ராமரும்தான். அதற்கு ராமாயணத்தில் உதாரணங்கள் உள்ளன. சமதர்மம் எனும் தர்மத்தை உடையவன் ராமன்.
திமுக ஆட்சியில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்றுவதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தாமல், இங்கு நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு ராமனும், சனாதன தர்மமும் காரணம் என்கிறார் வன்னியரசு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் ஒழுங்கு மற்றும் அஜாக்கிரதை காரணமாகவே தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. பிற மாநிலங்களில் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டங்கள் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் சிறப்பு சட்டம் கொண்டுவர முடியவில்லை. ஆணவக் கொலை தடுக்க ஸ்டாலினிடம் சென்று விசிக போராட்டம் நடத்த வேண்டும்.
இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ராமனை வணங்குபவர்களின் ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு செல்லக்கூடாது. மேலும் வன்னி அரசுக்கு பாஜ சார்பில் கம்பராமாயணம் புத்தகங்களை வழங்க உள்ளோம். தமிழையும், தமிழர்களையும் போற்றுவது பாரதிய ஜனதா கட்சி தான். துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழரை அறிவித்துள்ளது பாஜ தான். அதற்கு திமுக உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர் அவருக்கு ஆதரவு அளிக்க மறுக்கின்றனர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பற்று எனும் முகமூடியை ஸ்டாலின் தான் போட்டுக் கொண்டுள்ளார். தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சிபி ராதாகிருஷ்ணன் வருகிறார் என முதல்வர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் பாதுகாவலர்கள் என கூறுபவர்கள் அவர்கள் ஏன் ஒரு தமிழரை துணை ஜனாதிபதியாக ஆதரிக்க மறுக்கின்றனர். மம்தாவின் எதிர்ப்புக்காக தமிழ் வேட்பாளரை தியாகம் செய்தது ஏன் என அவர்கள் தான் கூற வேண்டும, என தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.