ADDED : ஜன 21, 2024 05:23 AM

''ஹோட்டல்ல வச்சு, 'டீலிங்'கை முடிச்சிடுதாரு வே...'' என்றபடியே, சுக்கு காபிக்கு ஆர்டர் தந்தார்
பெரியசாமி அண்ணாச்சி.''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தாம்பரம் கமிஷனரக கட்டுப்பாட்டுல வர்ற, மறைமலை நகர் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவுல இருக்கிற, 'உதவி' அதிகாரியை தான் சொல்லுதேன்...
''குற்ற வழக்குல கைது செய்றவங்களை, தனியார் ஹோட்டல் ரூம்ல அடைச்சு, 'டீலிங்' முடிச்சிட்டு தான், ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர்றாரு வே...
![]() |
''அப்புறமா, அவங்களை ஜெயிலுக்கு அனுப்புறப்ப, அவங்க மொபைல் போன்களை வாங்கி வச்சிக்கிடுதாரு... அவங்க ஜாமின்ல வந்ததும், குறிப்பிட்ட தொகை குடுத்தா தான், போன்களை திருப்பிதர்றாரு வே..
.
''உயர் அதிகாரிகளுக்கும் பங்கு குடுத்துடுறதால, அவரை யாரும் கண்டுக்க மாட்டேங்காவ...
''எல்லாத்துக்கும் மேலா, நைட் டூட்டிக்கு போதையில தான் வர்றாரு... போன மாசமே, அவரை துணை கமிஷனர்
கண்டிச்சும் திருந்தல வே...'' என்றார், அண்ணாச்சி.
''சுரேஷ், இந்த நாடகத்தையும் கேட்டுட்டு போங்க...'' என, நண்பரை இழுத்து பிடித்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
'திருப்பூர் கலெக்டர் ஆபீஸ்ல, நெடுஞ்சாலைத் துறை துணை தாசில்தாரா இருந்தவர், திடீர் நெஞ்சு வலியால, கோவை தனியார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டாருங்க... ஆனா, அது நாடகமாம்...
''துணை தாசில்தாருக்கு, தேனி, பெரியகுளத்துல பண்ணை வீடு இருக்கு... அங்க பணிபுரியும் ரெண்டு பேரை, இவர் அடிச்சிட்டாருங்க... அவங்க போலீஸ்ல புகார் தர வன்கொடுமை தடுப்பு சட்டத்துல வழக்கு பதிவு பண்ணிட்டாங்க...
''துணை தாசில்தார், மாஜிஸ்திரேட் பயிற்சி முடிச்சிருக்கிறதால, அவரை உடனே கைது பண்ணிட முடியாது... இதுக்காக, கலெக்டரிடம் போலீசார் அனுமதி கேட்டிருக்காங்க...
''கைதானா, சஸ்பெண்ட் ஆகிடுவோம்கிறதால, வக்கீல் தந்த ஆலோசனையை கேட்டு, நெஞ்சுவலின்னு நாடகமாடி, துணை தாசில்தார் ஆஸ்பிட்டல்ல போய் படுத்துட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''முருகேஸ்வரன் இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''ஆந்திர அரசிடம் கமிஷன் கேட்ட அதிகாரி கதையை கேளுங்கோ...'' என்றபடியே தொடர்ந்தார்...
''தெலுங்கு கங்கை திட்டப்படி, சென்னை குடிநீர் தேவைக்காக வருஷத்துக்கு 12 டி.எம்.சி., தண்ணீரை, ஆந்திர அரசு தரணும்... கால்வாய் பராமரிப்பு கட்டணமா வருஷத்துக்கு 10 முதல் 20 கோடி ரூபாயை, தமிழக அரசு குடுக்கறது ஓய்...
''நடப்பாண்டு பராமரிப்பு கட்டணத்தை நிர்ணயம் செய்ய, சென்னையில் உள்ள நீர்வளத்துறை அதிகாரி ஒருத்தரை, டிசம்பர் கடைசியில ஆந்திராவுக்கு அனுப்பி வச்சா... அங்க போனவர், 'தமிழக அரசு தர்ற பணத்துல, எனக்கு கமிஷன் தருவீங்களா'ன்னு அப்பாவியா கேட்டிருக்கார் ஓய்...
''ஜெர்க்கான ஆந்திர அதிகாரிகள், 'அரசு கஜானாவுக்கு போற பணத்துக்கு கமிஷன் வேணும்னா, எங்க முதல்வரிடம் தான் நீங்க கேட்கணும்'னு சொல்லி சிரிப்பா சிரிச்சிருக்கா ஓய்...
''கமிஷன் கேட்ட அதிகாரி, துறையின் முக்கிய புள்ளி உதவியாளருக்கு பெரிய தொகை குடுத்து தான், கோவையில இருந்து புரமோஷன்ல சென்னைக்கு வந்திருக்கார்...
''சில மாசத்துல, 'ரிட்டையர்' ஆக போறதால, குடுத்த பணத்தை எப்படி எடுக்கறதுன்னு தெரியாம, ஆந்திர அதிகாரிகளிடம் கமிஷன் கேட்டுட்டதா, துறைக்குள்ள பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''உமாபதி, கண்ணன் தந்த பணத்தை வாங்கிட்டீரா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி கதை பேச, மற்றவர்கள் எழுந்தனர்.


