பெஞ்சல் நிவாரணத்துக்கு ரூ.2000 கோடி வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
பெஞ்சல் நிவாரணத்துக்கு ரூ.2000 கோடி வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
UPDATED : டிச 02, 2024 10:02 PM
ADDED : டிச 02, 2024 09:07 PM

சென்னை: பெஞ்சல் புயலால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2000 கோடி விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதம் விவரம் வருமாறு:
பெஞ்சல் புயல் 23, நவம்பர்-2024 அன்று குறைந்த தாழ்வழுத்தப் பகுதியாக உருவெடுத்து, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
டிசம்பர் 1ம் தேதி பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ., வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயர வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி பேர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு முழு பருவத்தின் சராசரிக்கு 50 செ.மீ.க்கு மேல்) ஒரே நாளில் மழை பெய்துள்ளது.
இதன் விளைவாக பரவலான வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க, தன்னிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 9 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும், 9 மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதோடு, 38,000 அரசு அலுவலர்கள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதலுதவிப் பணியாளர்கள் அடங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்குத் தேவையான நிவாரண மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. உணவு தயாரிப்பு இடங்கள் நிறுவப்பட்டு, உணவு தயாரிக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற 12,648 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. புயல் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு (02.12.2024) இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தேன். இந்தப் பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதோடு, 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புயல் வெள்ளத்தினால் 9,576 கி.மீ சாலைகள், 1,847 சிறுபாலங்கள் மற்றும் 417 குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 1,649 கி.மீ அளவிற்கு மின் கடத்திகள், 23,664 மின்கம்பங்கள் மற்றும் 997 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது. 1,650 பஞ்சாயத்து கட்டிடங்கள் 4,269 அங்கன்வாடி மையங்கள், 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,936 பள்ளிக் கட்டடங்கள், 381 சமுதாயக் கூடங்கள் மற்றும் 623 குடிநீர் வழங்கல் பணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்தச் சேதங்கள் குறித்து, தமிழ்நாடு அரசு முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டு, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது. மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பேரிடரின் அளவு மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுகிறது. பாதிப்புகளின் அளவு மற்றும் மறு சீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் கோடியினை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இந்த அவசர கால நிதி மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு பெருமளவில் உதவிகரமாக இருக்கும். தமிழகத்தில் இந்தப் புயல் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்.
மத்தியக் குழுவினரின் ஆய்வின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு விவசாயம் மற்றும் வாழ்வாதாரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மோசமான தாக்கத்தை எதிர்கொள்ள, தேவைப்படும் கூடுதல் நிதியினை வழங்கிட வேண்டும்.
தமிழகம் எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நிலையிலிருந்து மீண்டு, இயல்பு நிலையை விரைவில் எட்டுவதற்கு, தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் பிரதமரின் ஆதரவையும், சாதகமான பதிலையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.