தமிழக கோவில் பிரசாதங்கள் ஆவின் நெய்யில் தயாரிக்கப்படுகின்றன: அப்பாவு
தமிழக கோவில் பிரசாதங்கள் ஆவின் நெய்யில் தயாரிக்கப்படுகின்றன: அப்பாவு
ADDED : செப் 22, 2024 03:17 AM
திருநெல்வேலி:''தமிழகத்தில் கோவில் பிரசாதங்கள் ஆவின் நெய்யில் தயாரிக்கப்படுகின்றன. திருப்பதி லட்டு குறித்து அங்கு சென்று கேளுங்கள்,'' என, திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக்கல்லுாரியில், 2018 முதல் 2024 வரை படித்த 102 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் மலர்விழி தலைமை வகித்தார். சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
தமிழகத்தில் சிறந்தது சித்த மருத்துவமாகும். திருவள்ளுவர் நோய் நாடி, நோய் முதல்நாடி, என்ன நோய், எப்படி குணப்படுத்துவது என இரு வரிகளில் மருத்துவத்தை கூறியுள்ளார். சித்தர்கள், மருத்துவம், சிகிச்சை, வாழ்வியல் முறையை வரையறுத்துக் கொடுத்துள்ளனர்.
சித்த மருத்துவம் மக்களுக்கு தேவையான ஒன்று. காலம் மாற மாற மக்கள் சித்த மருத்துவத்தை தேடி வருவர். மிக கொடிய நோய்களில் இருந்து காப்பது சித்த மருத்துவம். கொரோனாவிற்கு மருந்து இல்லை என்றனர்.
சித்த மருத்துவம் அதை கட்டுப்படுத்தியது. நோயை தடுக்கும் சக்தி சித்த மருத்துவத்திற்குத்தான் உள்ளது. சித்தா மாணவர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.