மனிதநேய ஜனநாயக கட்சி வழக்கு; தமிமுன் அன்சாரி பதிலளிக்க உத்தரவு
மனிதநேய ஜனநாயக கட்சி வழக்கு; தமிமுன் அன்சாரி பதிலளிக்க உத்தரவு
ADDED : மார் 03, 2024 04:22 AM
சென்னை : கட்சி பெயர், கொடி பயன்படுத்த தடை கோரி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தொடர்ந்த வழக்கில், தமிமுன் அன்சாரி பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் பஷீர் அகமது தாக்கல் செய்த மனு:
எங்கள் கட்சி, 2016 முதல் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச் செயலராக பதவி வகித்த தமிமுன் அன்சாரி, அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிமுன் அன்சாரி தலைமையில், கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டதாகவும், பின், பொதுக்குழு கூட்டப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.
தற்போது, எங்கள் கட்சியில் உறுப்பினராக தமிமுன் அன்சாரி இல்லை. போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து, தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவராக கூறி வருகிறார்.
சட்ட விரோதமாக, எங்கள் கட்சி பெயர், கொடியை பயன்படுத்துகிறார். இதற்கு, தடை விதிக்க வேண்டும். கடந்த 2022 டிசம்பரில் கூட்டிய பொதுக்குழுவை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, தமிமுன் அன்சாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

