டேங்கர் லாரிகள் 2ம் நாள் ஸ்டிரைக் 30,000 டன் எரிவாயு தேக்கம்
டேங்கர் லாரிகள் 2ம் நாள் ஸ்டிரைக் 30,000 டன் எரிவாயு தேக்கம்
ADDED : அக் 11, 2025 01:35 AM

நாமக்கல்:''எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம் இரண்டாம் நாளாக நேற்றும் நீடித்ததால், சுத்திகரிப்பு நிலையங்களில், 30,000 டன் எரிவாயு தேக்கமடைந்துள்ளது,'' என, தென்மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறினார்.
கடந்த, 2016க்கு பின் பதிவு செய்யப்பட்ட, தகுதியான அனைத்து எரிவாயு டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற ஸ்டிரைக்கை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து, சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:
தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில், 4,000 எரிவாயு டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மங்களூரு, பாலக்காடு, கொச்சி, சென்னை, துாத்துக்குடி, விசாகப்பட்டினம் உட்பட, 11 சுத்திகரிப்பு நிலையங்களில் எரிவாயு ஏற்றி செல்லும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாள் ஒன்றுக்கு, 15,000 டன் எரிவாயு வீதம், இரு நாட்களில், 30,0 00 டன் எரிவாயு பாட்லிங் பிளான்டுகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் சு த்திகரிப்பு நிலையங்களில் தேக்கமடைந்துள்ளன. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். ஸ்டிரைக் ஒரு வாரம் நீடித்தால், ஆறு மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எண்ணெய் நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த இட ஒதுக்கீடு அல்லது ஒதுக்கீடு விதிக்கு இணங்கவில்லை என கூறுவதை திட்ட வட்டமாக மறுக்கின்றன. தென் மாநிலங்கள் முழுதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் தடையின்றி கிடைப்பதாக, எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளிக்கின்றன.
வாடிக்கையாளர்களின் தற்போதைய பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்ய அனைத்து எரிவாயு சிலிண்டர் நிரப்பும் ஆலைகளிலும், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காஸ் ஏஜென்சிகளிலும் போதுமான அளவு சமையல் எரிவாயு சிலிண்டர் இருப்பு உள்ளது.
வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது சீராக தொடர்வதை உறுதி செய்ய தேவையான அனைத்து அ வசர நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.