புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியது மஹாராஷ்டிரா
புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியது மஹாராஷ்டிரா
ADDED : அக் 11, 2025 01:40 AM

சென்னை:நாட்டில் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய
புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களின் உற்பத்தி திறனில், இந்தாண்டு ஜனவரி
நிலவரப்படி, 24,333 மெகாவாட் உடன் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகத்தை,
தற்போது, மஹாராஷ்டிரா மாநிலம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
நீர்,
சூரியசக்தி, காற்றாலை மற்றும் பயோ மின்சாரம் போன்றவை சுற்றுச்சூழலை
பாதிப்பதில்லை. இதனால், இந்த வகை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த, மத்திய
அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த மின் நிலையங்களை தனியார்
நிறுவனங்களும், மாநில மின் வாரியங்களும் அமைத்து வருகின்றன. மாநிலம்
வாரியாக சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தி திறன் விபரங்களை, மத்திய
அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
விரைவான அனுமதி இந்தாண்டு ஜன., 31ம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்த
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் ராஜஸ்தான் முதலிடத்திலும்,
குஜராத் இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும், கர்நாடகா
நான்காவது, மஹாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும் இருந்தன.
கடந்த
செப்டம்பர் நிலவரப்படி, மின் நிறுவு திறன் பட்டியல் தற்போது வெளியாகி
உள்ளது. இதில், முதலிடத்தில் ராஜஸ்தான், இரண்டாவது இடத்தில் குஜராத்
தொடரும் நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகத்தை பின்னுக்குத்
தள்ளி, அந்த இடத்திற்கு மஹாராஷ்டிரா முன்னேறியுள்ளது.
இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் திட்ட முதலீட்டாளர்கள் கூறியதாவது:
நாட்டில், காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க, தமிழகத்தில்
சாதகமான வானிலை நிலவுகிறது. இந்த மின் நிலையங்களை அமைக்க குஜராத்,
ராஜஸ்தான் மாநில அரசுகள் குறைந்த விலையில் நிலம் வழங்குவதுடன், விரைவாக
அனைத்து அனுமதிகளையும் வழங்குகின்றன.
'கூடுதல்' செலவு தமிழகத்தில்
மின் திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் செய்யப்படுகிறது. மின்
திட்டத்திற்கான செலவுடன், 'கூடுதல்' செலவுகளையும் செய்ய வேண்டியுள்ளது.
இதனால், தமிழகத்தில் சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களை அமைக்காமல்,
முதலீட்டாளர்கள் மற்ற மாநிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் 5 மாநிலங்கள்
-----------------------------------
2025 ஜன., நிலவரப்படி/ மெகா வாட்
-----------------------------------
மாநிலம் - நீர் - காற்றாலை - பயோ மின்சாரம் - சூரியசக்தி - மொத்தம்
-------------------------------------------------------------------
ராஜஸ்தான் - 435 - 5,196 - 171 - 27,347 - 33,149
குஜராத் - 2,097 - 12,510 - 116 - 17,580 - 32,303
தமிழகம் - 2,301 - 11,444 - 1,045 - 9,541 - 24,333
கர்நாடகா - 4,973 - 6,851 - 1,909 - 9,282 - 23,017
மஹாராஷ்டிரா - 3,431 - 5,226 - 2,988 - 9,337 - 20,982
----------------------------------
2025 செப்., நிலவரப்படி/ மெகா வாட்
----------------------------------
மாநிலம் - நீர் - காற்றாலை - பயோ மின்சாரம் - சூரியசக்தி - மொத்தம்
-------------------------------------------------------------------
ராஜஸ்தான் - 435 - 5,208 - 207 - 34,556 - 40,406
குஜராத் - 2,103 - 14,374 - 129 - 23,413 - 40,019
மஹாராஷ்டிரா - 3,431 - 5,553 - 3,000 - 15,690 - 27,674
தமிழகம் - 2,301 - 11,885 - 1,047 - 11,355 - 26,588
கர்நாடகா - 4,974- 8,051 - 1,916 - 10,558 - 25,499
* தமிழகத்தில் மொத்த சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவு திறனில், அதிக திறனில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையங்களின் மின் நிறுவு திறன், 10,120 மெகா வாட்; மேற்கூரை சூரியசக்தி நிறுவு திறன், 1,163 மெகா வாட்; விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகளின் நிறுவு திறன், 72 மெகா வாட்.
இவை அனைத்துமே தனியாரால் அமைக்கப்பட்டுள்ளன.