'டெட்ரா பேக்' மது விற்பனை முடிவை கைவிட்டது 'டாஸ்மாக்'
'டெட்ரா பேக்' மது விற்பனை முடிவை கைவிட்டது 'டாஸ்மாக்'
ADDED : ஆக 28, 2025 12:31 AM
சென்னை:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாலும், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாகவும், 90 மி.லி., கொள்ளளவு உடைய, 'டெட்ரா பேக்கில்' மது விற்கும் முடிவை, 'டாஸ்மாக்' நிறுவனம் கைவிட்டுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது.
தினமும் சராசரியாக, 94 லட்சம் மது பாட்டில்கள் விற்பனையாகின்றன. இவற்றில், 90 சதவீதம், 180 மி.லி., கொள்ளளவு உடைய, 'குவார்ட்டர்' பாட்டில்கள்.
எனவே, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போல, 90 மி.லி., கொள்ளளவு உடைய டெட்ரா பேக்கில், மது விற்பனை செய்ய, டாஸ்மாக் முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2023ம் ஆண்டு பிரதாப் என்பவர், 'டெட்ரா அட்டையை மறு சுழற்சி செய்வதற்கான மையங்கள் இல்லை. டெட்ரா பாக்கெட்டுகள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
'எனவே, டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்களை அடைத்து விற்க தடை விதிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
மனு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், 'டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு இன்னும் அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், நிபுணர் குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்டோர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.
குழு டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே, டெட்ரா பேக்கில் மது விற்கும் முடிவு நிரந்தரமாக கைவிடப்பட்டுள்ளதாக, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

