வெள்ளத்தில் 'டாஸ்மாக்' ஊழியர் மரணம்: மாவட்ட மேலாளர் மீது புகார்
வெள்ளத்தில் 'டாஸ்மாக்' ஊழியர் மரணம்: மாவட்ட மேலாளர் மீது புகார்
ADDED : டிச 03, 2024 12:25 AM
சென்னை,வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த மதுக்கடை ஊழியர் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், உயிரிழப்புக்கு காரணமான மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு, 'டாஸ்மாக்' ஊழியர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா, குண்டலபுலியூரில் உள்ள மதுக்கடையில் விற்பனையாளராக சக்திவேல் பணிபுரிந்தார். கனமழை பெய்த நிலையில், மதுக்கடையில் தண்ணீர் சூழ்ந்திருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு, மாவட்ட மேலாளர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், விற்பனையாளர் கடைக்கு சென்று, போட்டோ எடுத்து அனுப்பிய பின், அதை தெரிவிக்க அலுவலகம் சென்றார்.
அந்த வழியில் ஏரி உடைந்து வெள்ள நீர் வெளியேறியதில், சக்திவேலின் பைக் நீரில் அடித்து செல்லப்பட்டது. அவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். அவரின் குடும்பத்திற்கு வாரிசு வேலையும், 50 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும்.
இதற்காக ஆர்ப்பாட்டம் அறிவித்த உடனே, டாஸ்மாக் உயரதிகாரிகள் அழைத்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். விரைவில் நிவாரணம் வழங்குவதுடன், ஊழியர் உயிரிழப்புக்கு காரணமான மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.