ADDED : ஜன 14, 2024 01:34 AM

''டிரைவரை பார்த்து மேலாளர்கள் அலறுறாங்க பா...'' என்றபடியே, இஞ்சி டீயை குடித்து முடித்தார் அன்வர்பாய்.
''விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்காக, நான்கைந்து சங்கங்கள் செயல்படுது... இதில் ஒரு சங்கத்தில், தென் மாவட்டத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருத்தர், மாநில நிர்வாகியா இருக்காரு பா...
''ஊழியர்களை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில், மேலாளர்களை செயல்பட விடாம, இவர் முட்டுக்கட்டை போடுறாரு... மீறி செயல்பட்டா, சங்க ஆட்களை சேர்த்துகிட்டு, 'மன உளைச்சலால் விஷம் குடிச்சிட்டாரு'ன்னு தகவல் பரப்புறது, மொட்டை பெட்டிஷன் போட்டு அலற விடுறதுன்னு இவரது அட்டகாசம் தாங்க முடியல பா...
''இந்த டிரைவரை கண்டாலே, மேலாளர்களும், கண்காணிப்பாளர்களும் தெறிச்சு ஓடுறாங்க... ஆளுங்கட்சியினர், 'சப்போர்ட்' வேற இருக்குறதால, இவர் மேல நடவடிக்கை எடுக்கவும் தயங்குறாங்க...
''இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதே, 108 ஆம்புலன்ஸ் மேலாளர்களின் இப்போதைய கவலையா இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''கட்சி பாகுபாடு இல்லாம, பொங்கல் பரிசு கொடுத்தாங்க ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''திருவள்ளூர் மாவட்டத்துல, பிரபலமான முருகன் கோவில் இருக்கற ஊருல, தி.மு.க.,வை சேர்ந்த பெண் தான், நகராட்சி தலைவரா இருக்காங்க...
''சமீபத்துல, நகர்மன்ற கூட்டம் நடந்துது... கூட்டம் முடிஞ்சதும், கட்சி பாகுபாடு இல்லாம, எல்லா கவுன்சிலர் களையும் அழைச்சு, எல்லாருக்கும் ஆளுயர காலண்டர், பட்டு சேலை, வேட்டி, 3,000 முதல் 5,000 ரூபாய் வரை பணம் கொடுத்து, நகராட்சி தலைவரம்மா திக்குமுக் காட வச்சுட்டாங்க ஓய்...
''அதோட, நகராட்சி ஆணையர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எல்லாருக்கும், இதே மாதிரி ஆளுயர காலண்டர், பட்டு சேலை, வேட்டி, தலைக்கு 1,000 ரூபாய் பணமும் கொடுத்து, 'ஹேப்பி பொங்கல்' சொல்லி அனுப்புனாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''டாஸ்மாக் ஊழியர்களிடமே, 'கட்டிங்' கேட்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டத்தில், 194 டாஸ்மாக் கடைகள் இருக்குது... இதுல, 45 கடைகளில் அனுமதி பெற்ற மதுக்கூடங்கள் செயல்பட்டுச்சுங்க... போன டிசம்பரில், மேலும், 53 கடைகளுக்கு மதுக்கூடம் நடத்த அனுமதி கொடுத்தாங்க...
''டாஸ்மாக் கடைகளில், வாடிக்கையாளர்களிடம் இருந்து பாட்டிலுக்கு 5 முதல் 20 ரூபாய் வரை கூடுதலா வசூல் செய்யுறாங்கல்ல... அதுல தங்களுக்கும், 'கட்டிங்' வேணும்னு, புதுசா மதுக்கூடம் உரிமம் எடுத்த ஆளுங்கட்சிக்காரங்க நெருக்கடி கொடுக்குறாங்க...
''டாஸ்மாக் ஊழியர்களோ, 'இப்பல்லாம் கூடுதல் விலைக்கு விற்க முடியல... கடை நிர்வாக செலவுக்கே சரியா இருக்கு'ன்னு சாக்கு போக்கு சொல்லியிருக்காங்க...
''மதுக்கூடம் ஏலம் எடுத்தவங்களோ, 'நடப்பது எங்க ஆட்சி... பங்கு வரலன்னா தொலைச்சிடுவோம்'னு நேரடியாகவே மிரட்ட துவங்கிட்டாங்க... சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம டாஸ்மாக் ஊழியர்கள் தவிக்குறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
'தெருவெங்கும் பழைய பொருட்களை எரித்து, சிறுவர்கள் போகி கொண்டாடிக் கொண்டிருக்க, பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள் மத்தியில், ''அமைச்சர்கள் செல்வாக்கை பரிசோதனை பண்ணியிருக்காவ வே...'' என்றபடியே, கருப்பட்டி காபிக்கு ஆர்டர் தந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சமீபத்துல அரசு பஸ் ஊழியர்கள், ஸ்டிரைக்ல ஈடுபட்டாங்களே... 'எந்த மாவட்டத்துலயும் பஸ்கள் ஓடலைன்னு தகவல் வரக் கூடாது'ன்னு, அந்தந்த மாவட்ட மற்றும் பொறுப்பு அமைச்சர்களுக்கு தலைமை உத்தரவு போட்டுச்சு வே...
''அதுலயும், மாவட்ட வாரியா, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ் ஸ்டிரைக் நிலவரம் குறித்து, தலைமையில இருந்து விபரம் கேட்டிருக்காவ... இதனால, 'எந்த பஸ்சும் டிரைவர் இல்லாம நிற்க கூடாது... ஏதாவது ஒரு டிரைவரை பிடிச்சு, பஸ்சை அனுப்பி வைங்க'ன்னு மாவட்ட அமைச்சர்களும், அதிகாரிகளை ஏவி, ஸ்டிரைக்கை வெற்றிகரமா முறியடிச்சுட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பதவி உயர்வுக்கே பல லட்சம் கேக்கறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்துல ரெண்டு உதவி கமிஷனர்கள், 10 செயற் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு தரணும்... இதுல சிலர், இன்னும் ரெண்டு மாசத்துல, 'ரிட்டையர்' ஆக போறா ஓய்...
''ஆனா, இந்த பதவி உயர்வு வழங்க, லட்சக்கணக்குல, 'கட்டிங்' கேக்கறா... சிலர் தர மறுத்துட்டதால, பதவி உயர்வு போடாம நிறுத்தி வச்சிருக்கா... இதனால, ரிட்டையர் ஆக இருக்கறவா நொந்து போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மாவட்டத்தை மூணா பிரிக்க போறாங்க...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அந்தோணிசாமி
''எந்த மாவட்டத்தை பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் அ.தி.மு.க., வுல இப்ப, மாநகர் மற்றும் புறநகர்னு ரெண்டு மாவட்டங்கள் இருக்குதுங்க... கட்சியை பலப்படுத்த, ரெண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலரை நியமிக்க, பழனிசாமி பிளான் பண்ணிட்டு இருக்காருங்க...
''சேலத்துல, 11 தொகுதிகள் இருக்கிறதால, அஞ்சு மாவட்ட செயலர் பதவி போடுவாங்க... இதனால, தங்களுக்கு பதவி கிடைக்கும்னு பலரும் காத்துட்டு இருந்தாங்க...
''ஆனா, சேலம் மாவட்டத்துல மட்டும், நாலு தொகுதிக்கு ஒரு மாவட்டம்னு பிரிக்க பழனிசாமி முடிவு பண்ணியிருக்காருங்க... அந்த வகையில, சேலம் கிழக்கு மாவட்டத்தில், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி தொகுதிகளை ஒதுக்க இருக்காருங்க...
''மாநகருக்கு சேலம் வடக்கு, தெற்கு, மேற்குன்னு மூணு தொகுதிகளும், சேலம் மேற்கில், இடைப்பாடி, மேட்டூர், ஓமலுார், சங்ககிரி ஆகிய நாலு தொகுதிகளையும் ஒதுக்க இருக்காருங்க...
''இப்ப, சேலர் மாநகர் மாவட்டத்துக்கு வெங்கடாசலம் செயலரா இருக்காரு... புறநகர் செயலர் இளங்கோவனை, கிழக்கு மாவட்டத்துக்கு நியமிக்க போறாருங்க... மேற்கு மாவட்ட பதவியை பிடிக்க, சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி ஆகியோர் காய் நகர்த்துறாங்க...
''ஆனா, 'பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ், யாரை கைகாட்டுறாரோ, அவருக்கு தான் பதவி'ன்னு அ.தி.மு.க.,வினர் சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

