ADDED : ஏப் 23, 2025 12:27 AM
சென்னை:''டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு, 64 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்,'' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
போதைப்பொருட்கள் பயன்படுத்துவோரை கண்டறிந்து, விரைவான சட்ட நடவடிக்கைகள் எடுக்க, குற்றப் புலனாய்வு துறை பயன்பாட்டிற்கு, 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வழங்கப்படும்
போதைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில், சிறப்பாக பணியாற்றியதற்கு, தமிழக முதல்வர் காவலர் பதக்கம் என்ற சிறப்பு பதக்கம் உருவாக்கப்பட்டு, அதனுடன் அன்பளிப்புத் தொகையாக, 50,000 ரூபாய், 2023 முதல் ஐந்து காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இது, இந்த ஆண்டு முதல் 15 பேருக்கு வழங்கப்படும்
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ள மது விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு, சிறை தண்டனை பெற்று விடுதலையாகி, மனம் திருந்தியவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க, சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த, தலா ஒருவருக்கு, 50,000 ரூபாய் மானியமாக வழங்க, 5 கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படும்
டாஸ்மாக் கடைகளில், 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள், 2,426 உதவி விற்பனையாளர்கள் என, மொத்தம், 23,629 பேர் தொகுப்பூதிய முறையில் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியத்துடன், இம்மாதம், 1ம் தேதி முதல் மாதந்தோறும், தலா 2,000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு, 64.08 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

