ADDED : ஜூலை 15, 2025 06:46 AM

சென்னை; மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்க, 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்கிறது. இவற்றில் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் என, 23,500 பேர் பணிபுரிகின்றனர்.
அனைவருக்கும் இந்தாண்டு ஏப்ரல் முதல் தலா, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என, துறையின் அமைச்சர் ஏப்ரலில் அறிவித்தார்.
மொத்தம், 2,000 ரூபாயில், 1,000 ரூபாயை அனைவருக்கும் ஊதிய உயர்வாகவும், 1,000 ரூபாயை ஊழியர் செயல்பாட்டை பொறுத்து ஊக்கத் தொகையாகவும் வழங்க, அரசு முடிவு செய்தது.
இதற்கு, ஊழியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், 2024 - 25ல் மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயம் செய்திருந்த விலையை விட கூடுதலாக, 10 ரூபாய்க்கு மேல் விற்ற 197 மேற்பார்வையாளர், 234 விற்பனையாளர், 20 உதவி விற்பனையாளர் என மொத்தம், 451 ஊழியர்களுக்கு, 1,000 ரூபாயும், மற்ற அனைவருக்கும், 2,000 ரூபாயும் ஊதிய உயர்வு வழங்கி டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு, ஏப்., முதல் இம்மாதம் வரை கணக்கிடப்பட்டு, சில தினங்களில் ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

