‘டாஸ்மாக்’ ஊழியர்கள் போராட்டம் ‘குடி’மகன்கள் திண்டாட்டம்
‘டாஸ்மாக்’ ஊழியர்கள் போராட்டம் ‘குடி’மகன்கள் திண்டாட்டம்
ADDED : நவ 01, 2026 09:11 PM

சென்னை: மதுக்கடைகளில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் இன்று (நவ.,1) கடைகளை திறக்காமல், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுபானம் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்கிறது. மதுபானம் வாங்குவோர், மதுவை குடித்த பின், காலி கண்ணாடி பாட்டில்களை, சாலையில் வீசுவதால், அவற்றை மிதித்து கால்நடைகள் உயிரிழப்பதுடன், வணிகர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிலர் நீர் நிலைகளில், வனப்பகுதிகளில் வீசுகின்றனர். இவற்றை தவிர்க்க, காலி மதுபாட்டில்களை, மது கடைகள் வாயிலாக திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதற்காக, மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லரை விலையுடன், 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இன்று முதல் இந்த தொகை சுற்றுச்சூழல் வரியாக எம்.ஆர்.பி., விலையுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. மேலும், 1,000 ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்குவோர், மின்னணு பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவும் அமலுக்கு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம் 12:00 மணிக்கு கடைகளை திறக்காமல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தர்மபுரி உட்பட, பல மாவட்டங்களில், டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பகல், 12:00 மணிக்கு, மதுபானங்கள் வாங்க, மது கடைகளுக்கு வந்தவர்கள், கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். கடை முன்பிருந்த ஊழியர்கள், கடை திறக்கப்படாது எனக்கூறி, குடிமகன்களை திருப்பி அனுப்பினர்.
அவர்கள் எங்கு கடை திறந்துள்ளது என விசாரித்து, அந்த கடைகளுக்கு படையெடுத்தனர். சில இடங்களில், மது வாங்க வந்தோர், கடை திறக்கப்படாததால், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பலர் எப்படியும் கடை திறப்பர் என்ற நம்பிக்கையுடன், அங்கேயே அமர்ந்திருந்தனர். ஆனால், இரவு வரை கடை திறக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, பல கடைகளின் முன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில், தமிழ்நாடு வாணிப கழகத்தின், டாஸ்மாக் கிடங்கு மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு, டாஸ்மாக் தொழிற்சங்கத்தை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம், முதுநிலை மண்டல மேலாளர் கணேஷ் பேச்சு நடத்தினார். ஆனால், தீர்வு ஏற்படவில்லை.
இது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ள நிலையில், காலி பாட்டில்களை பெறுவது, கூடுதல் சுமையாக இருக்கும். இதற்கென தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக சங்கத்தினர் நடத்தி வரும் பேச்சு முடியும் வரை, கடைகளை திறக்க மாட்டோம்’ என்றனர்.
