அதிக விலைக்கு மது விற்றால் 'சஸ்பெண்ட்' எதிர்த்த வழக்கில் டாஸ்மாக் பதில் தர உத்தரவு
அதிக விலைக்கு மது விற்றால் 'சஸ்பெண்ட்' எதிர்த்த வழக்கில் டாஸ்மாக் பதில் தர உத்தரவு
ADDED : நவ 13, 2024 04:35 AM

சென்னை ; சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் செயலர் மோகன்ராஜ் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், 5,408 சில்லரை மதுக்கடைகள் இயங்குகின்றன. இங்கு, 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில், 18 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. சில்லரை மதுபான கடைகளில் விற்பனையாளர், உதவியாளர்கள் உள்ளனர்.
மதுபான கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்பட்டால், அந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதாக, புதிய விதியை நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த மாதம், 29ம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், அதிக விலைக்கு மதுபானம் விற்றால், விற்பனையாளர் மட்டுமின்றி, ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
தனிநபரின் செயலுக்கு கூட்டாக தண்டனை விதிப்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. டாஸ்மாக் நிர்வாகத்தின் சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறுவதாகவும், தொழில் தகராறு சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. எனவே, சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி பரத சக்ரவர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. சுற்றறிக்கைக்கு தடை விதிக்கும்படி மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
டாஸ்மாக் நிர்வாகத் தரப்பை கேட்காமல், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும், 27ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

